தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் செயற்குழு கூட்டம்
செயற்குழு கூட்டம்
மல்லசமுத்திரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. மல்லசமுத்திரத்தில் நடந்த ஆசிரியர் மன்ற செயற்குழுகூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் தேவராசன் தலைமை வகித்தார்.ஒன்றியச் செயலாளர் ரவி வரவேற்றார். மாவட்ட மதிப்புறுத் தலைவர் ஆசைத்தம்பி தொடக்க உரை ஆற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ந.சரசுவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கு.பாரதி பாராட்டுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் மெ.சங்கர் சிறப்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் இயக்கப் பேருரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் ப.வேல்முருகன், ஆ.முரளிதரன், வே.சந்திரசேகரன், ந.தேவகி, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மா.செந்தில்வடிவுஉள்ளிட்ட 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றியப் பொருளாளர் க.சண்முகசுந்தரம் நன்றி கூறினார். இதில், தமிழ்நாடு அரசு ஆணை மற்றும் அரசு நிதித்துறை கடிதத்திற்கு நேர் எதிரான வகையில் எழுப்பப்பட்டு மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடையை முற்றாக இரத்து செய்திட வேண்டும், மாணவர்களின் கல்வியை பின்னோக்கி இழுக்கும் வகையில் செயல்படும் எண்ணும்- எழுத்தும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் கல்வித்துறையின் வலைதளம், மென்பொருள் செயலி மற்றும் இயங்கலை பதிவுப் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முற்றிலுமாக விடுவித்திட வேண்டும், தொடக்கக் கல்வியை பெரிதும் பாதிப்படையச் செய்து வகுப்பறை கற்றல் - கற்பித்தலை பின்னுக்குத் தள்ளிவிடும் பேராபத்தினை கைவிடல் வேண்டும், மாணவர்களின் கற்றல்- கற்பித்தல் திறனை பாதிப்படையச் செய்யும் அலைபேசி செயலி வழித் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்திட வேண்டும், எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகளுக்கும் ஆசிரியர்களை மாநில, மாவட்ட, ஒன்றியக் கருத்தாளர்களாக பயன்படுத்தப்படுவது முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும், தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மதிய நேர உணவு வழங்கும் சத்துணவு ஊழியர்களை கொண்டு நடத்திட வேண்டும். தமிழ்நாட்டின் சாதாரணநிலை, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களைந்திட வேண்டும், புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை முற்றாக இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்திட வேண்டும், கொரோனா பெருந்தொற்றினை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடுப்பூதிய உரிமையை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா காலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும், பணிமூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் , நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர் காலியிடங்களை மாணாக்கர் கல்விநலன் மற்றும் நிர்வாக நலன் கருதி விரைந்து நிரப்பிட வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் நேர்முகத் தேர்வுகள், முற்றாக இரத்து செய்யப்பட்டு வேலை வாய்ப்பக மூப்பின்படி ஆசிரியர் நியமனம் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.