நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் ஆசிரியர் தின விழா
ஆசிரியர் தின விழா
நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் ஆசிரியர் தின விழா, வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் நூலகர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். இஸ்ரோ முன்னாள் உயர் அதிகாரி இளங்கோ தலைமை தாங்கினார். கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டத் தலைவர் டி.எம்.மோகன் அறிமுகவுரை நிகழ்த்தினார். நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) முனைவர் வெ.சந்திரசேகரன் துவக்கவுரை ஆற்றினார். ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன், ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஜெகதீசன் தமிழ்ச்செல்வன், பூவராகவன், லதா அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துசாமி கலந்து கொண்டார். நிகழ்வின் தொடக்கத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன், வ.உ.சிதம்பரனார் ஆகியோர் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட அளவில் ஆசிரியர் பணியை அறப்பணியாக ஏற்றுக் கொண்டு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற மலையாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் செந்தில் அவர்களுக்கு வ.உ.சிதம்பரனார் அர்ப்பணிப்பாசிரியர் விருது வழங்கப்பட்டது. வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயபாலன், நாமக்கல் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சித்ரா, புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தங்கவேல், பாரதி பள்ளியின் கலைஆசிரியர் சர்தார்பாஷா, எறையம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை உமாராணி ஆகியோருக்கு இந்திய பெண்ணியத்தின் தாயார் சாவித்திரிபாய் புலே சிறப்பாசிரியர் விருது வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டது.
சிறப்பு பேச்சாளராக பட்டிமன்ற புகழ் பேராசிரியர் சுப.மாரிமுத்து கலந்து கொண்டு "ஆசிரியர் பணி அறப்பணி" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நல்லாசிரியர் கோபால.நாராயண மூர்த்தி பாராட்டுரை வழங்கினார்.
நிகழ்வில் அரசின் சார்பில் சிங்கப்பூருக்கு கல்வி சுற்றுலா மாணவர்களை அழைத்து செல்லும் தமிழாசிரியர் செல்வ.செந்தில்குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காமராசர் தொண்டர் ஏகாம்பரம், ரவி, கலை இளங்கோ, கவிதா உள்ளிட்ட ஆசிரியர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.