இரண்டு நபர்கள் பலியாக காரணமான டெம்போ ஓட்டுனர் கைது
குமாரபாளையம் அருகே வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் பலியாக காரணமான டெம்போ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர் காஸி, 30. இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் ஜவுளி தயாரிப்பு ஆலையில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.சேலம் மாவட்டம் அரியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்து விட்டு, தனது மாமியார் தாரா காஸி, 50, மற்றும் மனைவி பாத்திமா ஆகிய மூவரும் ஹோண்டா டியோ டூவீலரில் பெருந்துறை நோக்கி, நேற்றுமுன்தினம் காலை 08:00 மணியளவில் சேலம், கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரபாளையம் அருகே நேரு நகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் மூன்று பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிய நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வட மாநில தொழிலாளி ஜஹாங்கீர் காஸி, மற்றும் அவரது மாமியார் தாரா காசி ஆகியோர் உயிரிழந்தனர். பாத்திமா அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர், குமாரபாளையம் அருகே நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, 38, 38என்பவரை இன்ஸ்பெக்டர் தவமணி கைது செய்தார்.