மோகனூர் அருகே மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

மோகனூர் அருகே மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

அமலாக்கத்துறை சோதனை

மோகனூர் அருகே மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள், மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி சோதனை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளி அதனை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்ட விரோதமாக மணல் விற்பனையும் நடைபெறுவதாகவும், புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் மத்திய அமலாக்கத் துறையை சேர்ந்த 10 அதிகாரிகள், 7 பேர் கொண்ட மத்திய சி.ஐ.எஸ்.எப். போலீஸ் படையுடன் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கிற்கு திடீரென்று வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் காவிரி ஆற்றிலிருந்து தினசரி எவ்வளவு மணல் எடுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவு மணல் எடுத்து வந்து சேமிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு மணல் விற்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவு மூலம் எவ்வளவு விற்பனை நடைபெற்றுள்ளது, அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்தும், அதற்கான ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா எனவும் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆற்றில் மணல் அள்ளி அதனை சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவரும், சேமிப்பு கிடங்கில் உள்ள மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வருவதை அறிந்த மணல் சேமிப்பு கிடங்கில் பணியாற்றி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஊழியர்கள், பணியாளர்கள், மணல் அள்ளும் ஹிட்டாச்சி இயந்திர ஆபரேட்டர்கள் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த பொழுது அங்கு பணியில் இருந்த பொதுப்பணித் துறை ஒப்பந்த ஊழியர் ஒருவர் மட்டுமே அலுவலகத்தில் இருந்த நிலையில், அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். பின்னர் அங்கிருந்த ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி சோதனையிட்டனர். இதனையடுத்து பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் சங்கீதா, மணல் சேமிப்பு கிடங்கிற்கு வரவழைக்கப்பட்டு அவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story