" நிலவில் உள்ள மண்ணும் நாமக்கல்லில் உள்ள மண்ணும் ஒண்ணு"
இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6:04 மணியளவில் நிலவில் தரை இறங்கியது. இந்த சரித்திர சாதனை நிகழ்வை பல்வேறு தரப்பினரும் தொலைக்காட்சிகளிலும், செல்போன்களிலும் கண்டு மகிழ்ந்தனர். நிலவில் இந்தியா உள்ளது என்று இஸ்ரோ அறிவித்ததை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடினர்.
அதே நேரத்தில் நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து பிரக்யான் எனப் பெயரிடப்பட்ட ரோவர் தரையிறங்கும் பணி நேற்று இரவு 10 மணியளவில் தொடங்கியது. பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறக்கும் நிகழ்வு முக்கியமானதாகும். நிலவில் தரையிறங்கும் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொ
ண்டு, ரோவர் நிலவில் இருந்து லேண்டருக்கு தரவுகளை அனுப்பும். பின்னர் லேண்டர் விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
ரோவர் தரையிறங்கும் பணி தொடங்க சிறிது நேரம் ஆனது. "ரோவர் சில மணிநேரங்களில் வெளிவரும். சில சமயங்களில் அதற்கு ஒரு நாள் கூட ஆகும்.. ரோவர் வெளியே வந்தவுடன், அது இரண்டு சோதனைகளைச் செய்யும்" என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய பிறகு செய்தியாளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரோ அறிவிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சி
இதனிடையே சந்திரயான்-3 நிலவில் தரை இறங்கியதால் நாமக்கல், சேலம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் பெருமை அடைந்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2019-ல் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியபோது, அங்கு தரையிறங்குவது தொடர்பாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்துக்கு, நிலவின் மேற்பரப்பில் உள்ள `அனார்த்தசைட்' வகை மண் தேவைப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில், நிலவின் மேற்பரப்பில் உள்ள அனார்த்தசைட் பாறை வகைகள், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அருகேயுள்ள சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருப்பது, சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறையினர் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருந்து 50 டன் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அங்கு அனார்த்தசைட் பாறை மற்றும் மண் மூலம் அமைக்கப்பட்ட தளத்தில், ரோவர் வாகனத்தின் ஓடுதிறன் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல, தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் சோதனை ஓட்டத்துக்கும் இந்த மண் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குன்னமலை, சித்தம்பூண்டி கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்னமலை, சித்தம்பூண்டியில் உள்ள மண்ணும், நிலவில் உள்ள மண்ணும் ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்த மண் சந்திரயான்-3 சோதனை ஓட்டத்துக்கும் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பதுடன், நிலவில் சந்திரயான்-3 லேண்டர் கலன் வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குன்னமலை கிராம மக்கள் கூறியுள்ளனர்.
இதே போல், சந்திரயான்-3 விண்கலத்தின் இன்ஜின் சேம்பரில் பொருத்துவதற்காக ஐசிஎஸ்எஸ்- 1218- 321 என்ற குளிரூட்டப்பட்ட ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடு, சேலம் இரும்பாலையில் இருந்து வழங்கப்பட்டது. சந்திரயான் திட்டத்துக்காக சேலம் இரும்பாலை தொடர்ச்சியாக மூன்று முறை பங்களிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலவில் இந்தியா கால்பதிக்க தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மட்டும் பங்களிக்கவில்லை, தமிழ்நாட்டு மண்ணும் பங்களித்து இருப்பது பெருமைக்குரியதாகும்.