ஆதாரம் இருக்கு.. "மன்னிப்புலாம் கேட்க முடியாது".. என உதயநிதி பதிலடி

மகளிர் உரிமை தொகை திட்டத்தை பெண்கள் உளமார வரவேற்கிறார்கள்... உதயநிதி பேச்சு....

ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவோம் என பிரதமர் மோடி கூறியதாக, வருடம் மற்றும் தேதியை குறிப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதற்கான ஆதாரத்தை கொடுக்க தயாராக உள்ளதாகவும் மன்னிப்புலாம் கேட்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அம்பத்தூர் பகுதி திமுக சார்பில் சென்னை பாடியில் உள்ள இளங்கோ நகர் பூங்காவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள், கல்லூரி மாணவர்கள் விளையாட்டு வீரர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து விழா மேடையில் அமைச்சர் உதயநிதி பேசியாதாவது:

தமிழ்நாட்டை பொறுத்தவரை கலைஞருக்கு முன் கலைஞருக்கு பின் என்று பிரிக்கலாம். ஜெயலலிதா அம்மையார் இறந்தவுடன் தமிழகத்தில் ஒரு அலங்கோலமான ஆட்சி நடந்தது என்பது மக்களுக்கு தெரியும், தமிழ்நாட்டில் அப்போது போட்ட ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்கள் மக்களை ஆண்டார்கள். ஒருவர் தர்மயுத்தம் என்று போய் உட்கார்ந்தார். ஒருவர் கூவத்தூரில் தவழ்ந்தார். மற்றொருவர் அனைவருக்கும் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தார். அதிமுக ஆட்சியை நம்மிடம் கொடுத்த நேரம் கொரோனா நேரம்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தை பெண்கள் உளமார வரவேற்கிறார்கள். தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்து கொண்டே உள்ளது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரதமர் விமானத்தை எடுத்துக்கொண்டு பிரான்சில் உள்ளார். மோடி ஆட்சிக்கு வந்தால் எல்லோருடைய கணக்கிலும் 15 லட்சம் கொடுப்போம் என்று பிரதமர் கூறினார். ஆனால் இன்று நாங்கள் அப்படி சொல்லவே இல்லை பொய் சொல்றீங்க என்று கூறுகிறார்கள்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் அக்கா வானதி சீனிவாசன் அவர்கள் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார். நான் திரும்பவும் சொல்கிறேன் மன்னிப்புலாம் கேட்க முடியாது. மோடி சொன்னது உண்மை. எங்கே பேசினார் எப்போது பேசினார் என்பதை தேதியோடு சொல்கிறேன். கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சார கூட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என மோடி அவர்கள் தான் கூறினார்.

அதை அமைச்சர் அவர்களும், அருண் ஜெட்லி அவர்களும் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். நான் வேண்டுமானால் ஆதாரத்தை தரவும் தயார்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

Tags

Next Story