நுகர்வோர் கோர்ட்டில் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் வழக்கில் தீர்வு

நுகர்வோர் கோர்ட்டில் சமரசப் பேச்சுவார்த்தை மூலம்  வழக்கில் தீர்வு

சமரசப் பேச்சுவார்த்தை மூலம் வழக்கில் தீர்வு

நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெற்ற, சமரசப் பேச்சுவார்த்தை அடிப்படையில், வங்கியில் இருந்து அசல் கிரையப்பத்திரங்களைப் பெற்று கடன் பெற்றவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் மயில்சாமி (61). இவர் கடந்த 2018 ஜனவரி மாதத்தில் ராசிபுரத்தில் உள்ள, தனியார் வங்கியில் அவரது வீட்டின் அசல் கிரையப் பத்திரங்களை அடமானமக வைத்து ரூ. 2 லட்சத்து 18 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். கடன் பெறும்போது ஆவணங்களுக்கான கட்டணம் ரூ 6300 என கூறிய வங்கி, அதன்பிறகு ரூ. 13,850 எடுத்துக் கொண்டது என்றும், ஆண்டுக்கு 13 சதவீத வட்டி என கூறிவிட்டு, 24 சதவீத வட்டியை வசூலித்தார்கள் என்றும், கடனை திரும்ப செலுத்தும் காலம் 48 மாதங்கள் எனக் கூறிவிட்டு 60 மாதங்கள் என மாற்றிவிட்டனர் என்றும் பல புகார்களை கூறி, மயில்சாமி கடந்த 2021ம் ஆண்டு வங்கி மீது நாமக்கல் நுகர்வேர் கோர்ட்டில் வழங்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள போதே வங்கியில் பெற்ற கடன் அசல் தொகை மற்றும் வட்டி ஆகியவற்றை செலுத்தி விட்டதாகவும், வங்கி அடமானம் வைத்த அசல் பத்திரங்களை திருப்பி தர மறுப்பதாகவும் கோர்ட்டில் மயில்சாமி புகார் தெரிவித்தார்.

இந்த நிலையில் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி உத்தரவின் பேரில், இந்த வழக்கில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த வக்கீல் ராஜ்குமார் நியமிக்கப்பட்டார். நுகர்வோர் சமரச மையத்தில் நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டது. கடன் பெற்றிருந்தவர், வங்கியில் கொடுத்திருந்த அசல் கிரையப் பத்திரம், வருவாய்த்துறை ஆவணங்கள் உட்பட 6 ஆவணங்கள், கடன் பெற்றவரால் வங்கிக்கு உத்தரவாதத்துக்கு கொடுக்கப்பட்ட இரண்டு செக்குகள், கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழும் வங்கி தரப்பில் கோர்ட்டில் ஒப்படைத்தனர். அவற்றை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ், வழக்கு தாக்கல் செய்த மயில்சாமியிடம் வழங்கினார்.

இந்த சமரச பேச்சுவார்த்தையின் போது புகார்தாரர் வக்கீல் தனசேகரன், வங்கி வக்கீல் அமுதவல்லி ஆகியோர் பங்கேற்றனர். நுகர்வோர் சமரச மையத்தின் மூலம் பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளும் போது யாருக்கும் தோல்வி பெற்று விட்டோம் என்ற மனநிலை இருப்பதில்லை என்றும் இவ்வாறு பேசி முடிக்கப்படும் போது மேல் முறையீடு போன்ற சட்ட நடவடிக்கைகள் தவிர்க்கப்படுகிறது என்றும் சமரசராக பணியாற்றிய வக்கீல் ராஜ்குமார் தெரிவித்தார்.

Tags

Next Story