ராசிபுரம் வங்கியில் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

ராசிபுரம் வங்கியில் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்த   மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கோரிக்கை மனு

ராசிபுரம் பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்குவதற்காக, சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் மக்கள் நலக்குழு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் ச.உமாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, ராசிபுரம் மக்கள் நலக்குழு சார்பில், அதன் தலைவர் பாலசுப்ரமணி, செயலாளர் நல்வினை செல்வன், பொருளாளர் முருகன், ஒருங்கிணைப்பாளர் சபீர், கெளரவத் தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. இங்குள்ள பள்ளிகளில், பள்ளிக் கல்வியை முடித்து விட்டு, உயர்கல்வி பயில்வதற்காக, பல ஏழை, எளிய, மாணவ, மாணவிகள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

அவர்கள் கல்விக் கட்டணம் முழுமையாக செலுத்த முடியாத ஏழ்மை நிலையில் உள்ளனர். இதனால் அவர்களுக்கு கல்விக்கடன் கேட்டு, ராசிபுரம் பகுதியில் உள்ள வங்கிகளை பெற்றோர்கள் அணுகினால், வங்கி அதிகாரிகள் அவர்களை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

உயர்கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவ மாணவியர், கல்விக் கடனை வங்கியின் மூலம் எளிமையான முறையில் பெறுவதற்கு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம், வங்கிகளின் சார்பில், கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம், ராசிபுரம் நகரில் நடத்திக் கொடுத்து, மாணவ மாணவியர் எளிதாகக் கல்விக்கடன் பெற்று, உயர் கல்வி படிக்க உதவ வேண்டும் என்று, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Next Story