டிரான்ஸ்போர்ட் கம்பெனி ரூ. 1.35 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

டிரான்ஸ்போர்ட் கம்பெனி ரூ. 1.35 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

 நீதிமன்றம் உத்தரவு

பொருட்களை சரியான முறையில் கொண்டு சேர்க்காத, தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனி ரூ. 1.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவ ட்ட நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

கோவையில், வெல்டிங் மெசின்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் வெங்கடேஷ். இவர் கடந்த 2017 ஜனவரி மாதம் ரூ 30,450 மதிப்புள்ள, வெல்டிங் இயந்திரம் ஒன்றை, குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனி மூலம் புக்கிங் செய்து அனுப்பினார்.

குஜராத்தில், வாடிக்கையாளர் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, வெல்டிங் இயந்திரம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், குஜராத் வாடிக்கையாளர் அதை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார். இயந்திரத்தை அனுப்பிய வெங்கடேஷ் டிரான்ஸ்போர்ட் கம்பெனியை தொடர்பு கொண்ட போது, அவர்கள் அதற்கான இழப்பீடு வழங்க மறுத்துவிட்டனர். இதனால் டிரான்ஸ்போர்ட் கம்பெனி மீது, கடந்த 2017 ஆம் ஆண்டு, கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 2022ம் ஆண்டு விரைவான விசாரணைக்காக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. தற்போது வழக்கு விசாரணை முடிவடைந்து, நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்னசாமி ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினார்கள்.

தீர்ப்பில், வாடிக்கையாளர் அனுப்பிய வெல்டிங் இயந்திரத்தை, பாதுகாப்பான முறையில் கையாளாமல் சேதப்படுத்தியது, சேவை குறைபாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்தவருக்கு டிரான்ஸ்போர்ட் கம்பெனி வெல்டிங் இயந்திரத்துக்கான விலை ரூ 30,450 மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூபாய் 1 லட்சம், வழக்கின் செலவு தொகையாக ரூ. 5 ஆயிரம் சேர்த்து ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 450-ஐ 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story