அப்துல் கலாமின் நினைவு தினத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

அப்துல் கலாமின் நினைவு தினத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நடிகர் விஷால் பேட்டி

மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால் கூறியதாவது,

இன்று அப்துல் கலாம் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது "எனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி அவர் என்று கூறினார்".

மேலும் பேசிய அவர், குடியரசுத் தலைவர் பதவிக்கே அவர் பெருமை சேர்த்தவர், தன் வாழ்நாள் முழுவதும் மாணவர்களை பற்றியும், நாட்டிற்காகவும் சிந்தித்து செயல்பட்டவர்.

அவரின் நினைவு தினத்தை ஒட்டி மறைக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது நான் நடத்தி வரும் தேவி அறக்கட்டளை மூலம் இந்த பணிகளை செய்வதில் மகிழ்ச்சி. இது மட்டுமின்றி ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விச் செலவுக்காக பல்வேறு உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். அனைவரும் முடிந்த வரையில் ஏழை எளியவர்களுக்கு கல்விக்காக உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.

மக்களுக்காக நிறைய விஷயங்களை செய்ய ஆசைப்படும் நீங்கள் அரசியலுக்கு வரும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு,

இங்கு இருக்கும் அனைவரும் அரசியல்வாதிகள் தான், அரசியல் என்பது சமூக சேவை மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசியல்.

லட்சக்கணக்கான பொதுமக்களின் பிரதிநிதியாக அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் அவரின் வேலை எனவே அது ஒரு சமூக சேவை தான் அரசியல் பணம் சம்பாதிப்பதற்கான பிசினஸ் கிடையாது.

மற்ற அரசு ஊழியர்களை போல முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது எனவே சமூக சேவை செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் அந்த வகையில் நான் எப்பொழுதோ அரசியலுக்கு வந்து விட்டேன்.

அரசியல்வாதிகள் நடிகர்களாக நடிக்கும் போது நடிகர்கள் அரசியல்வாதியாவதில் தவறு ஒன்றும் இல்லை இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

நடிகர் என்பது மக்கள் கொடுக்கும் பட்டம் தான். நடிகர்கள் அரசியலுக்கு வருவது அடுத்த கட்டத்திற்கு போலாம் என்ற எண்ணத்தில் இல்லை மேற்கொண்டு அதிகாரம் கிடைத்தால் மக்களுக்கு இன்னும் பல நன்மைகளை செய்ய முடியும் என்ற நோக்கம் தான்.

கொரோனாவிற்கு பிறகு போதை பழக்க வழக்கம் இளைஞர் மத்தியில் அதிகரித்துள்ளது அது போன்ற பழக்க வழக்கங்களில் இருந்து இளைஞர்களை மீட்கவும் எங்கள் அறக்கட்டளையின் மூலம் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

மணிப்பூர் சம்பவம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஷால், இலங்கையில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் நிர்வாணமாக அழைத்துச் சென்றபோது அதை பார்த்து மனம் உடைந்து போனேன் இதுபோன்ற நிலைமை இன்னும் நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஜாதி மத பேதமின்றி தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முதல்வர் இருந்தால்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மணிப்பூர் சம்பவத்தை பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறது. ஒரு சில திரைப்படங்களின் ட்ரெய்லர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் அந்தப் படங்களில் நடித்த நடிகைகளே பங்கேற்க மறுப்பதாக தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்

ஒரு சிலர் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு செல்வதில்லை உதாரணமாக நயன்தாரா போன்றவர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் நாங்கள் யாரும் யாரையும் நிர்பந்தித்து ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல கூற முடியாது. ஆனால் தயாரிப்பாளர்கள் சொல்வதிலும் தவறில்லை படத்தில் நடித்துள்ளவர்கள் வந்தால் மக்களிடம் தங்கள் படம் சென்றடையும் என்று அவர்கள் நினைப்பதிலும் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.

முன்னதாக மேடையில் விவசாயிகளின் விளைநிலங்களில் விலங்குகளிடமிருந்து தங்கள் பயிரை பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக புதிய கருவி கண்டுபிடித்துள்ள மாணவனுக்கு பரிசு வழங்கிய நடிகர் விஷால் அதைத் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

Tags

Next Story