''ஆளுநருக்கு வேலை இல்லை, அதனால்தான் அவர் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்" - ஆளுநர் பயணத்தை விமர்சித்த உதயநிதி

ஆளுநருக்கு வேலை இல்லை,  அதனால்தான் அவர் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்  - ஆளுநர் பயணத்தை விமர்சித்த உதயநிதி
யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்கு தெரியும் எடப்பாடிக்கு பதிலடி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் டெல்லி பயணத்தை விமர்சித்து ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை, யார் யாருக்கு அடிமை என அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.


தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதால் இது தொடர்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

கடந்த ஜூன் 29 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களிலேயே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்க சொல்லி உள்ளதால் அதுவரை பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் ஆளுநர் தெரிவித்து இருந்தார்.


அந்த சமயத்தில் அட்டர்னி ஜெனரல் விடுமுறையில் இருந்ததால் அவரது கருத்தை உடனடியாக ஆளுநரால் பெற முடியவில்லை. இப்போது அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி டெல்லி வந்து விட்டார். இதனால் அவரை நேரில் சந்தித்து கருத்து கேட்க ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்தார். இப்படி தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைத்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஆளுனர் ரவி, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

இதற்கிடையே ஆளுநரின் டெல்லி பயணத்தை விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை. அதனால்தான் அவர் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்" என்றார். வரும் 13 ஆம் தேதி வரை டெல்லியில் முகாமிடும் ஆளுநர், பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்வார் என்று தெரிகிறது. இதனிடையே, ஆளுநரின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநருக்கு வேறு வேலை இல்லாததால் டெல்லி செல்வதாக பதிலளித்தார்.

திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கால்பந்தாட்டப் போட்டியின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செந்தில் பாலாஜி கைது செய்த பிறகு திமுக அமைச்சர்கள் பயத்தில் இருப்பதாக எடப்பாடி கூறியிருக்கிறார். நாங்கள் எவருக்கும் பயப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி அப்படித்தான் பேசுவார். யார் யாருக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதிமுகதான் பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்றுத்தர முதல்வர் மு.க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார்.

தமிழக ஆளுநர் டெல்லி பயணம் குறித்து கேட்கிறீர்கள்.. ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை. அதனால்தான் அவர் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Tags

Next Story