"எங்களுக்கு பிரதமர் பதவியில் ஆசையில்லை" - மல்லிகார்ஜுன கார்கே
2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூரில் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமராக ராகுல் காந்தி தான் பொறுப்பேற்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியோ அல்லது அதிகாரமோ முக்கியமல்ல என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் 23ம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடந்தது. இதில் 18 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைமை வகித்துள்ளது. சோனியா காந்தி தலைமையில் நேற்று முதல் நாள் ஆலோசனை நடந்து முடிந்தது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட 24 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இன்று 2வது நாள் கூட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நேற்றைய ஆலோசனைக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில செயல் தலைவரும், அம்மாநில அமைச்சருமான ஈஸ்வர் காண்ட்ரே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும். ராகுல் காந்தி தான் பிரதமராவார் என கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”சென்னையில் நடந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவிலேயே காங்கிரஸுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை. பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன். காங்கிரஸின் விருப்பம் எல்லாம் அரசியல் சாசனம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியைப் பேணுவது மட்டுமே.
மாநில அளவில் நம்மில் சிலருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை நான் அறிவேன். ஆனால், அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தது அல்ல. மேலும், அந்த வேறுபாடுகள் பெரியதும் அல்ல. ஆகையால் சாமானிய மக்களின் நலனுக்காக, நடுத்தர வர்க்க மக்களுக்காக, இளைஞர்களுக்காக, ஏழைகளுக்காக, பட்டியலின மக்களுக்காக, பழங்குடியினருக்காக, சிறுபான்மையினருக்காக, திரைமறைவில் நசுக்கப்படும் அவர்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக நாம் ஒன்றிணைவோம்" என்று பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகம் யார் என்ற கேள்வி இந்த ஆலோசனைக் கூட்டம் பற்றிய அறிவிப்புகள் வெளியான நாள் முதலே விவாதிக்கப்பட்டுதான் வருகிறது.