சேலம் விமான நிலையத்துக்கு கலைஞர் பெயர் சூட்ட எதிர்ப்பு ஏன்?
சேலம் விமான நிலையம்
சேலம் விமான நிலையத்துக்கு மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட எதிர்ப்பு உருவாகியுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் சர்வதேச விமான நிலையங்களும், சேலம், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய 3 நகரங்களில் உள்நாட்டு விமான நிலையங்களும் உள்ளன. இதில் சென்னையில் உள்ள சர்வதேச விமான முனையத்துக்கு அறிஞர் அண்ணா பெயரும், உள்நாட்டு விமான முனையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு எந்த விமான நிலையங்களுக்கும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படவில்லை. இந்நிலையில் திடீரென சேலம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை திமுக தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரமான சேலத்தில்
ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரத்தில் அமைந்துள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவை தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சியால் இந்த விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், கொரோனா காலக் கட்டத்தில் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. கொரோனா தடைக்காலம் முடிவுற்று, தற்போது இயல்புநிலை நீடிப்பதால், சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவையை கொண்டு வர வேண்டும் என சேலம் மற்றும் அண்டை மாவட்ட பொதுமக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று பெங்களூரு- சேலம் - கொச்சி வழித்தடத்தில் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 16ம் தேதி விமான சேவை தொடங்கப்பட்டது.
இதனிடையே சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் 6-வது கூட்டம், குழுவின் தலைவரும் சேலம் மக்களவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விமான நிலைய இயக்குனர் ரமேஷ், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஹரிபாஸ்கர், சுரேஷ் இமானுவேல், பாபு, ஓமலூர் டி.எஸ்.பி.சங்கீதா மற்றும் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பனமரத்துப்பட்டி ராஜா, வழக்கறிஞர் லட்சுமணபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்,
சேலம் மாவட்டத்துக்கு இரும்பாலை, பெரியார் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள், ரெயில்வே கோட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தந்து தொழில் நகரமாக மாற்றிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றிடும் வகையில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கேட்டு கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி ஆகிய நகரங்களுக்கு இரு மார்க்கமாக விமான சேவை தொடங்குவதற்கு காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பலமுறை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மேலும்,
சேலம் விமான நிலையத்தில் இருந்து கூடுதலாக நேரடியாக சீரடி, திருப்பதி மற்றும் கோவாவிற்கு விரைவில் விமான சேவைகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்திட விமான போக்கு வரத்து அமைச்சகத்தை கேட்டுக் கொள்ளப்பட்டது. சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து காமலாபுரம் விமான நிலையத்திற்கு இரு மார்க்கமாக பேருந்து வசதியை ஏற்படுத்தி தருவதற்கு சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேருவை கேட்டுக் கொள்வது. சேலம் விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை தொடங்குவதற்கு முன்பு விமான பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு காலை நேர விமான சேவையை சென்னைக்கு தொடங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் எம்.பி பார்த்திபன், சேலம் விமான நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விமான நிலையம் என்று பெயர் சூட்ட, நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன், விரைவில் அவரின் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் சேலம் விமான நிலையத்துக்கு கலைஞர் பெயரை சூட்ட பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தால் தான் ரயில் நிலையத்துக்கும், விமான நிலையத்துக்கும் தலைவர்களின் பெயரை சூட்ட முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுக- பாஜக நல்லுறவு இருந்ததால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து அறிவித்தார். ஆனால் தற்போது திமுக - பாஜக இடையே நல்லுறவு இல்லாததால், தமிழக அரசின் கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.
சேலம் எம்.பி பார்த்திபனின் கோரிக்கையை போன்று, ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. கோவை விமானநிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும், திருச்சி விமான நிலையத்துக்கு ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று ஒரு தரப்பும், தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என்று ஒரு தரப்பும் கோரிக்கை விடுத்து வருகிறது. இதேபோல் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயரை சூட்ட வேண்டும் என்று ஒரு தரப்பும், வீரன் சுந்தரலிங்கம் பெயரை சூட்ட வேண்டும் என்று ஒரு தரப்பும் கோரிக்கை விடுத்து வருகிறது. இவை எதற்கும் செவிசாய்க்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.இந்த நிலையில் சேலம் விமான நிலையத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே கலைஞர் பெயரை சூட்டுவது உறுதியாகும் என்றும் , அப்படியே பெயர் சூட்டினாலும், டெல்டா மாவட்டங்களின் தலைநகராக திகழும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு கலைஞர் பெயர் சூட்ட வாய்ப்பிருப்பாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.