பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

eps
ஆம்பூரில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் விரோத திமுக அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பது அதிமுகவின் நிலைபாடு. ஊழல் அரசான இந்த திமுக அரசை அகற்ற வேண்டும் என்பது பாஜகவின் நிலைபாடு. அதனால் கூட்டணி அமைத்துள்ளோம். இதே திமுக 1999ல் பாஜக உடன் கூட்டணி வைத்ததே? இங்குள்ள இஸ்லாமிய பெண்கள் வேலைவாய்ப்புக்கான சூழலை உருவாக்க கோரியுள்ளனர். அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அதை பிரதான வாக்குறுதியாக அறிவித்து, ஆட்சி அமைந்ததும் நிச்சயமாக வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கான சூழல்களை ஏற்படுத்திக் கொடுப்போம். சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதிமுக ஆட்சியின் போது, அவர்களை சந்தித்து, தேநீர் குடித்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சொன்னார் ஸ்டாலின். இன்று போராடியவர்களை கைது செய்து பல மண்டபங்களில் அடைத்துள்ளனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என கேட்டால், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். அவர்கள் கேட்டது ஒன்று, இவர் சொல்வது ஒன்று. இன்று இடதுசாரி எம்.பி சு.வெங்கடேசன், திமுக அரசின் நடவடிக்கை வெட்கித் தலைகுனிய வேண்டியது என்கிறார். இப்பதான் கூட்டணிக் கட்சியினருக்கு ரோஷம் வருகிறது. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தவர்கள், போராட்டங்கள் நடப்பதை கண்டு, இப்போது கேள்வி எழுப்புகின்றனர். இடதுசாரி கட்சித் தலைவர் பெ.சண்முகமும் திமுக அரசின் செயல்பாட்டை இன்று கண்டித்துள்ளார்” எனக் கூறினார்.
