ஆரோக்கியமான கரூர்... அசத்தும் செந்தில்பாலாஜி! இயற்கை வேளாண் திருவிழா கோலாகலம்!

senthil balaji
கரூரில் விமரிசையாக நடைபெற்ற 2ஆம் ஆண்டு இயற்கை வேளாண் திருவிழாவில் விவசாயிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் திரளாக பங்கேற்று பயனடைந்தனர். இயற்கை வேளாண் திருவிழாவிற்கு பல்வேறு வகையில் துணை நின்று, கரூர் மக்களின் ஆரோக்கியத்திற்காக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டிய ஆர்வத்தை பலரும் பாராட்டினர். இது ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு காலம். வளர்ந்து வரும் நவீன அறிவியல் யுகத்தில், மக்களிடம் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. உலகில் உணவு உற்பத்திக்காக அதிகப்படியான ரசாயன உரங்களை பயன்படுத்தியதால், பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதை, கண் முன்னே நாம் காண்கிறோம். இதே நிலை நமது வருங்காலத் தலைமுறைக்கு வந்துவிடக்கூடாது என பலரும் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, பண்டைய தமிழர் பாரம்பரிய முறையாக இயற்கை விவசாயம் மீது மக்களுக்கு ஆர்வம் பிறந்துள்ளது. தமிழகத்தில் அண்மைக்காலமாகவே இயற்கை விவசாயத்தின் மீதான ஈடுபாடு அதிகரித்து வருகிறது. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகளை சந்தித்து இயற்கை விவசாயம் குறித்து பதிவு செய்த கருத்துக்களும் பயிற்சிகளும் இன்று அதற்கான காலத்தை கனியச் செய்துள்ளது என்றால் மிகையல்ல. நம்மாழ்வார் ஏற்படுத்திய அடிச்சுவட்டை பின்பற்றி தமிழக அரசும் இயற்கை ஆர்வலர்களும் தொடர்ந்து பயணிப்பதால், இன்று பல இடங்களிலும் இயற்கை விவசாயம், இயற்கை உணவு முறை மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது. அதற்கேற்ப பல நகரங்களில் இயற்கை விவசாயம் சார்ந்த கண்காட்சிகள், கருத்தரங்குகள், இயற்கை உணவுத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கரூர் மாநகரில் கரூர் இயற்கை விவசாயிகள் சங்கம் , நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம், ஜெயராம்ஸ் கலை அறிவியல் கல்லூரி ,கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜே சி ஐ கரூர் டைமண்ட் மற்றும் ஒய்.ஐ. கரூர் ஆகிய அமைப்புகள் இணைந்து, 2ஆம் ஆண்டு இயற்கை வேளாண் திருவிழாவை வெகு விமரிசையாக நடத்தின. கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், ஆகஸ்ட 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை நடைபெற்ற இயற்கை வேளாண் திருவிழாவை, முன்னாள் அமைச்சரும் கரூர் தொகுதி சட்டப்ப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய செந்தில் பாலாஜி, "கரூர் இயற்கை வேளாண் திருவிழாவிற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து இதை 2 நாள் நடத்த வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டனர். அடுத்தாண்டு முதல் 2 நாட்கள் நடத்தப்படும் என்று உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன். விவசாயிகளின் மகன்களே, வாழ்வாதாரத்திற்கு மாற்று தொழிலை நாடிச்ச் செல்லும் நிலை இன்று மாறி, இளம் தலைமுறையினரும், பட்டதாரிகளும் இயற்கை விவசாயம் பக்கம் திருப்பி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இயற்கை வேளாண்மை, மக்களின் உடல் நலனை பேணுகிறது. அரசை பொறுத்தவரை முதலமைச்சர் அவர்கள், இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தருகிறார்.வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை, முதல்வரின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வரின் ஆட்சியில் 4 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் பேருக்கே விவசாய மின் இணைப்பு தரப்பட்டு இருந்தது. திமுக ஆட்சியில் 3 புதிய வேளாண் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முதலாவது கரூர் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி, மாயனூரில் விரைவில் பணி தொடங்கும். மாயனூரில் அரசு அறிவித்த தடுப்பணை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும். அரவக்குறிச்சி பகுதியில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. குளித்தலை பகுதியில் தடுப்பணைகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண் திருவிழாவில், மொத்தம் 80 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் விவசாயிகள் நேரடியாக தாங்கள் தயாரித்த இயற்கை வேளாண் மதிப்பு கூட்டிய பொருட்களுடன் 30 அரங்குகளை அமைத்திருந்தனர். தடுப்பணைகள் மட்டுமின்றி, நதிநீர் நீரேற்று பாசன சங்கங்களை அமைத்து வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் உப்படமங்கலம்- வெள்ளியணை பகுதிக்கு பாசன நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாதம்வளையம் ஏரி தூர்வாரி நிச்சயம் அமராவதி உபரி நதி நீர் தேக்க வேண்டும் என்ற கோரிக்கையை, நிச்சயம் நமது முதலமைச்சர் நிறைவேற்றுவார். இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரவரக்குறிச்சியில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் முருங்கை ஏற்றுமதியில் இந்திய அளவில் கரூர் மாவட்டம் முதலிட பெறும்" என்று செந்தில்பாலாஜி பேசினார். இயற்கை வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த உணவு பொருட்கள் மற்றும் விதைகளுடன், கண்காட்சியில் பங்கேற்றனர். இயற்கை வேளாண் திருவிழாவில், சமைக்காத உணவுகள், பாரம்பரிய அரிசி சிறுதானிய பலகாரங்கள், பிஸ்கட் வகைகள் மற்றும் உணவுகள் , இயற்கை பானங்கள், மூலிகை சத்து உணவுகள் நூற்றக்கும் மேற்பட்ட வகைகள் இடம் பெற்றிருந்தன.
மேலும், மரபு விதைகள் கண்காட்சியில் 120 வகையான பாரம்பரிய நெல் , நாட்டு காய்கறி, கிழங்குகள் வகைகள், சிறுதானியங்கள் இடம் பெற்றிருந்தன. அதேபோல், பாரம்பரிய கால்நடைகளின் கண்காட்சியில் இயற்கை உரங்கள், உழவு கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இயற்கை வேளாண் வல்லுனர்கள் பலர் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர். இயற்கை விவசாயம் செய்வதற்கான பல்வேறு ஆலோசனைகள், அதற்கான புத்தகங்கள், மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள், விவசாயத்தில் ஆள் பற்றாக்குறையை போக்கும் புதிய வகை விவசாய கருவிகள், மண்புழு உரம் தயாரித்தலுக்கான பயிற்சி, நன்மை தரும் பூச்சி, தீமை தரும் பூச்சி குறித்த விளக்கம், இயற்கை உரம் தயாரித்தல், நெல் நாற்றங்கால்களில் புதிய தொழில்நுட்பங்கள்,விவசாயிகளை சோதிக்கும் களை மேலாண்மையில் புதிய கருவிகள் கொண்டு களைகளை அகற்றுவது, விவசாய பணிகளை எளிமையாக மேற்கொள்வதற்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மற்றும் கையால் இயக்கக் கூடிய கருவிகள் பாரம்பரிய விதை ரகங்கள் என ஏராளமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் திருவிழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தரமான இயற்கையான பொருட்கள் தயாரிப்பது குறித்தான விளக்கக் கையேடுகளும் வழங்கப்பட்டன. விழாவில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா, ஓ. சித்தர், டாக்டர் அருள் பிரகாஷ், வெற்றிமாறன், வானகம் ரமேஷ், விஷ்ணு, எம்.என். பெரியசாமி, சஞ்சை பெருமாள், கே.வி.எம். திரவியம், Dayanas திரவியம், பிரியா, இயற்கை விவசாசி சுந்தரேசன், மருதம் கூட்டமைப்பின் அருளானந்தம், அதன் தலைவர் லெனின், வேளாண் வல்லுநர் செல்வம், பழனிசாமி, யோகநாதன், விதை சுந்தர், சேதுபதி, ஆனந்த், சத்யராஜ் ராஜேஷ், சவிதா, அன்புராஜா, சக்திவேல், கார்த்தி, நாகராஜன், பழனிசாமி, தனபதி, கே. வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் விவசாயிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதேபோல், மாணவர்கள் பலர் பங்கேற்று, இயற்கை விவசாயம் குறித்த தலைப்புகளில் உரையாற்றி, பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கண்காட்சியில் பங்கேற்ற நிறுவனங்கள் பலவும், கரூர் மக்கள் தந்த ஆதரவை கண்டு பிரமித்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அதேபோல், இயற்கை வேளாண் திருவிழாவுக்கு ஆதரவு தரும் வகையில், கொங்கு திருமண மண்டபத்தார் தரப்பில் முற்றிலும் கட்டணம் பெறாமல், கண்காட்சிக்கு இடம் வழங்கியுள்ளனர். எல்லாவற்றிற்கும் சிகரமாக கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, இயற்கை வேளாண் திருவிழாவில் காட்டீய அதீத ஆர்வமும் அக்கறையும், இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. விழாவில் பேசிய பலரும், ஆரோக்கியமான கரூர் உருவாக ஆர்வம் காட்டும் செந்தில் பாலாஜியின் பணிகளை பெருமையோடு நினைவு கூர்ந்தனர். ஒட்டுமொத்தத்தில், பல்வேறு அமைப்புகள் அளித்த ஏகோபித்த ஆதரவுடன், கரூர் இயற்கை வேளாண் திருவிழா, மிக வெற்றிகரமான நிகழ்வாக நடைபெற்றது.
