உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை: ஈபிஎஸ்

eps
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பேசினார். அப்போது அவர், “மணப்பாறை நகரமே அதிர்கின்ற அளவுக்கு மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சியளிக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் நமது கழக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உங்கள் எழுச்சியே சாட்சி. மணப்பாறை என்றாலே முறுக்குக்குப் பெயர் பெற்ற பகுதி. அதோடு வீரமிக்க இளைஞர்கள் இருக்கின்றீர்கள், ஜல்லிக்கட்டு காளை அடக்கக்கூடிய வீரர்கள் நிறைந்த பகுதி. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முழு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்படும். 51 மாத திமுக ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைத்திருக்கிறதா? விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி இது. இரவு, பகல் பாராமல் உழைக்கின்ற மக்கள் நிறைந்த பகுதி. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்தது கிடையாது. விவசாயிகளுக்கு நீர் முக்கியம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். நான்காண்டு மக்களைப் பார்க்காத முதல்வர் ஸ்டாலின். இப்போது வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பதையே முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். நான்காண்டு இதுகூட தெரியவில்லை என்றால் எந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தினார் என்று பாருங்கள். இதேபோல் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டித் திட்டம் கொண்டுவந்து மனுவுக்குத் தீர்வு அளிக்கிறேன் என்றார். எல்லாவற்றையும் தீர்த்துவிட்டாரா…? அப்படி தீர்த்திருந்தால் இப்போது எதற்கு இந்தத் திட்டம்? சதுரங்க வேட்டை படத்தின் வசனம் போன்று ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று மீண்டும் அட்சிக்கு வரவே இப்படி விளம்பரம் செய்கிறார்கள். ஓரணியில் தமிழ்நாடு என்று வீடு வீடாக மக்களிடம் சென்று, கெஞ்சி, உறுப்பினர் சேர்க்கிறார்கள். நன்றாக ஆட்சி செய்தால்தானே உங்களது கட்சியில் மக்கள் சேர்வார்கள்..? மக்கள் தானாக வந்து உறுப்பினராக சேர்ந்தால்தான் கட்சி வளரும், அப்படி தானாக உறுப்பினர்கள் வந்து சேரும் ஒரே கட்சி அதிமுக. திமுக குடும்ப கட்சி, அதிமுக மக்களுக்கான கட்சி. திமுக கார்ப்பரேட் கம்பெனியாகிவிட்டது. கட்சியின் தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மகளிரணித் தலைவர் கனிமொழி. அவ்வளவுதான், எல்லாம் முடிந்துவிட்டது. வேறு என்ன பதவி இருக்கிறது? பிரதான பதவிகளை குடும்பத்தில் உள்ளவர்களே பங்குபோட்டுப் பிரித்துக்கொண்டனர். அங்கு இருக்கும் 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்றவர்கள். ரகுபதியை அதிமுக தொண்டர்கள் எம்.எல்.ஏ ஆக்கினார்கள், அம்மா அமைச்சர் பதவி கொடுத்தார். நமக்கு துரோகம் செய்துவிட்டு, அந்த எட்டு பேரும் எட்டப்பராக மாறி திமுகவுக்கு சென்றுவிட்டனர். அங்கு சென்று ரகுபதி நஞ்சு வார்த்தையைக் கக்கிவருகிறார். மின் கட்டணம் இந்த ஆட்சியில் 67 சதவிகிதம் உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். அப்போதும் கூட மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100 முதல் 150 ஞதவீதம் வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். வியாபாரிகள் எல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும், அதிமுக ஆட்சி எப்படியிருந்தது..? திமுக மற்றும் அதிமுக ஆட்சியை ஒப்பிட்டுப் பார்த்து ஆதரவு தாருங்கள். பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது, இதனால் கல்வித்தரம் குறைந்துவிட்டதால் 207 பள்ளிகள் மூடப்பட்டது. இந்த பள்ளிகளை அரசு மீண்டும் திறப்பதாகச் சொல்லியது, ஆனால் திறப்பது போன்று தெரியவில்லை.. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை அரசுப் பள்ளியில் குறைந்துள்ளது. ஏன்..? சரியான ஆசிரியர் இல்லை, தரமான கல்வி கிடையாது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளியில் சேர்கிறார்கள். மேலும் அரசுப் பள்ளிகளில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர், அதில் ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்கள் யாராவது போதைப் பொருள் பயன்படுத்துகிறார்களா என்று பார்க்க வேண்டுமாம், எவ்வளவு அவமானமான செயல். ஒரு அரசாங்கம் தலைமை ஆசிரியர்களுக்கு இப்படி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. விவரத்தைக் கேட்டிருக்கிறார்கள். இதுக்காகவா அரசுப் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புகிறோம்..? உங்கள் பள்ளியில் சிறந்த மாணவன் யார் என்று கேளுங்கள். சிறந்த விளையாட்டு வீரர் யார் என்று கேளுங்கள். ஒழுக்கமானவர் யார் என்று கேளுங்கள். அதைவிட்டுவிட்டு மாணவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக இப்படி சுற்றறிக்கை அனுப்பிய அரசு தொடர வேண்டுமா? இதைத்தான் நான் பலமுறை சொல்லிவந்தேன். போதை பொருள் தாராளமாக கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது. மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கிறார். எப்போது..? எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? இவ்வாறு பேசுவதன் மூலம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார். சிறுபான்மை மக்களுக்கு நிறைய திட்டங்கள் கொண்டுவந்தோம், வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது திமுகவும் கூட்டணி கட்சிகளும் அவதூறு பரப்புகின்றன. இஸ்லாமியர்களுக்கு என்னென்ன திட்டங்களைக் கொடுத்தோம் என்பதைச் சொல்கிறேன். சிறுபான்மை மக்களுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். 31 ஆண்டு அதிமுக ஆட்சி ஜாதி, மதச் சண்டையின்றி அமைதிப்பூங்காவாக விளங்கியதை சிறுபான்மையினர் எண்ணிப்பார்க்க வேண்டும். நீங்கள் ஆதரவு வழங்குவதும் வழங்காததும் உங்கள் விருப்பம் ஆனால் திட்டமிட்டு ஆளும்கட்சியினர் அவதூறு பரப்புகிறார்கள், அதை மட்டும் நம்பவேண்டாம் என்று கூறினார்.
