புலிகள் நுழைந்தவுடன் அணிலை காணவில்லை: சீமான்

சீமான் அறிக்கை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘மரங்களின் மாநாடு’ நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சீமான், “மரங்களுக்கு என்ன மாநாடு இவர்களுக்கு மரை கழண்டுவிட்டதா என்று கேட்பவர்களுக்கு எங்களுக்கு மரை கழண்டதால் அல்ல மறை கற்றதனால் இந்த மரங்களின் மாநாடு.
"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு"
"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்"
என்ற மறை தந்த வள்ளுவர் பெருமகனாரின் வழியில் நின்று வாழ்கின்ற பிள்ளைகள் என்பதனால் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் மரங்களின் மாநாடு நடத்தப்படுகிறது. நாட்டுக்காக நிற்பவர்களால்தான் இந்த மாநாட்டை நடத்தமுடியும். அற்ப ஓட்டுக்காக நிற்போர் மாநாட்டை நடத்த முடியாது. காடு செல்வம், ஆடு மாடுகள் செல்வம், அறிவு செல்வம், கடல் செல்வம், மலைகள் செல்வம், மணல் செல்வம். காந்தி படம் போட்ட காகிதம் அல்ல செல்வம். அந்த காகிதத்தையும் தந்தது மரம் செடிகள் தான். இந்த இயற்கையின் படைப்பில் பெரிய வியப்பு அனைத்து உயிர்களும் ஆக்சிசன் காற்றை சுவாசித்துவிட்டு கரியமில வாயுவை வெளியிடுகின்றன. மரங்கள் மட்டும் தான் கரியமில வாயுவை சுவாசித்து விட்டு ஆக்சிசன் காற்றை வெளியிடுறுகிறது எனக் கூறினார்.
