அமெரிக்க வரி நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

CM Stalin
அமெரிக்க வரி நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் 50 சதவீத வரியால், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. உற்பத்தி, மென்பொருள் துறைகளில் முன்னணியில் உள்ள தமிழகம், அமெரிக்காவை தன் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில், தமிழகத்தின் ஏற்றுமதியில், 31 சதவீதம் அமெரிக்காவிற்கே சென்றது. இதனால், 50 சதவீத வரி விதிப்பு, தமிழகத்தை அதிகம் பாதிக்கிறது. இந்த கடின சூழலில், மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை. தமிழக அரசு தன்னால் இயன்றதை செய்து வருகிறது. ஆனாலும், மாநில அரசுக்கென வரம்புகள் உள்ளன. எனவே, மத்திய அரசு, தன் பங்கை உணர்ந்து, குறிப்பாக ஜவுளித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஏற்றுமதி துறைகளை பாதுகாக்க, புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வில், 'அமெரிக்கா வரி விதிப்பால், தமிழகத்திற்கு, 33,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என கணிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, இயந்திரங்கள், வைரம் மற்றும் நகைகள், வாகன உதிரிபாகங்கள் ஆகிய துறைகளில், வேலை இழப்பு 13ல் இருந்து 36 சதவீதம் வரை உயரும் என அஞ்சப்படுகிறது. சர்வதேச பேச்சுகள், சுங்கவரி கொள்கை, பொருளாதார ஆதரவு போன்வற்றில், மத்திய அரசின் முன்முயற்சிகளும் ஆதரவும் இன்றியமையாதவை. ஏற்றுமதியை பாதுகாக்கவும், வேலை இழப்பிலிருந்து தொழிலாளர்களை காப்பாற்றவும், மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற, தமிழகம் தயாராக உள்ளது. ஒன்றிணைந்து செயல்பட்டால், ஒரு சிக்கலான தருணத்தை மாற்றத்திற்கான வாய்ப்பாக மாற்ற முடியும். இதற்காக மத்திய அரசு தீவிரமாகவும், ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
