தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன்

TTV Dinakaran
2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றது டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக. அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகும் தொடர்ந்து பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். அதே சமயம் கடந்த ஏப்ரல் மாதம் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்தன. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை கேள்விக்குறியானது. இந்த நிலையில் கூட்டணியில் தான் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கடந்த மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது கூட டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லி பாஜக தலைவர்கள் சமாதானப்படுத்த வேண்டும் என்றுதான் வலியுறுத்தினார். எனினும், சில நாட்களாக டிடிவி தினகரனின் பேச்சு அவர் கூட்டணி குறித்து பாஜகவுடன் அதிருப்தியில் இருப்பதாகவே தெரிந்தது. கூட்டணியில் தாங்கள் இருக்கிறோமா என்பதை பாஜகதான் விளக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் காட்டுமன்னார் கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக எந்தவித நிபந்தனையும் இன்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். இப்போது நடைபெற உள்ளது தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல். சரியான முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள் என்று காத்திருந்தோம்.ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் இருப்பதாகவே கருதினேன். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை, துரோகம் தலைவிரித்தாடுகிறது. ஜெயலலிதா தொண்டர்கள்இனியும் இணைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துகொண்டு நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். எந்தக் கூட்டணியில் இடம்பெறுவோம் என்பது குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்போம்” என்று தெரிவித்தார். கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், அமமுகவும் விலகியுள்ளது பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளதோ என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதிமுக கூட்டணிக்கு வந்தபிறகு தங்கள் மீது பாராமுகம் காட்டியதால் கூட்டணியில் இருந்து அமமுக விலகியதாகவே தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களால் டிடிவி தினகரன் 2017ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். அதே ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதற்கு பின்னணியில் பாஜக இருந்ததாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது.பின்னர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்ற டிடிவி தினகரன், 2018ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அதிமுகவை மீட்பதே இலக்கு என்று களமிறங்கிய டிடிவி தினகரன், பாஜகவை சரமாரியாக விமர்சனங்கள் செய்து வந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். 2021 சட்டமன்றத் தேர்தலை தேமுதிகவுடன் இணைந்து சந்தித்தார். எனினும், தோல்வியைத் தழுவினார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
