இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது! நம்பிக்கையூட்டுகிறது! சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சி, ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி!

dravidian model
நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இரண்டு அமைப்புகள் தொடங்கப்பட்டன. ஒன்று, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம். மற்றொன்று, அதே 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ். இரண்டு அமைப்புகளும் இந்திய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தின. திராவிடர்களுக்கான அமைப்பாக அறிவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த திமுக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. ஆர்எஸ்எஸின் வழித்தோன்றலான பாஜக குஜராத், உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பிறகு இந்திய ஒன்றிய அரசை கைப்பற்றியது. ஆட்சிப் பரப்பின் அளவு, அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடும்போது ஒரு சித்தாந்தமாக ஆர்எஸ்எஸ் பெரிய வெற்றி பெற்றது போல தோன்றக்கூடும். ஆனால் பாஜகவின் ஆட்சியில்தான் இந்தியப் பொருளாதாரமும் ஆட்சி இயந்திரமும் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மதவாத அரசியல், இந்தியா போன்ற வறுமை நிறைந்த நாட்டில் சுலபத்தில் மக்களின் ஆதரவை பெற்று விட முடியும். பாமர மக்களிடம் வெறுப்பை பரப்புவது சுலபம். அதனால்தான் கடும் வறுமையில் இருக்கிற நாடுகளில் மத கலவரங்கள் மிக சாதாரணமாக நடக்கின்றன. இத்தகைய பின்னணி உள்ள ஒரு நாட்டில் சமூக சீர்திருத்தத்தை அடிப்படை கொள்கையாக கொண்ட ஒரு சித்தாந்தம் தமிழ்நாட்டில் நூறாண்டு காலம் அரசியல் ரீதியாகவும் சமூகத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து பொருளாதாரத்திலும் சமூல நல குறியீடுகளிலும் வளர்ச்சிப் பாதையில் நடத்திச் செல்கிறது. இந்த மதிப்பீட்டின்படி சுயமரியாதை இயக்கம்தான், திராவிட மாடல் ஆட்சிதான் உண்மையாகவே வெற்றியாகக் கருதப்பட வேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் திராவிட மாடலையும், இந்துத்துவத்தின் ஆரிய மாடலையும் ஒப்புநோக்குவோம். இது இன்னும் தெளிவாக விளங்கும். சமூக மேம்பாட்டை அளவிடும் கருவியாக பெண் கல்வி தொடர்பான தரவுகளை ஒப்பிடலாம். தமிழகத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேலான பெண்கள் கல்லூரி படிப்பை முடிக்கிறார்கள். இது தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு கூடுதல். குஜராத்தில் பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவு. முனைவர் பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிக அதிகம். மென்பொருள் துறை உள்ளிட்ட உயர் வருவாய் பணிகளில் தமிழகத்து பெண்களின் பங்களிப்பு ஏனைய மாநிலங்களை விட அதிகம். இதுபோன்ற எந்த தர மதிப்பீட்டிலும் இந்துத்துவ சித்தாந்தம் ஆட்சி செய்யும் குஜராத் தமிழ்நாட்டின் அருகில் கூட வர இயலாது. திராவிட சித்தாந்தம் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில்தான் இந்தியாவின் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் இருக்கின்றன. அறிவியல் பூர்வமாக எதையும் அணுக வேண்டும் என்பதை வலியுறுத்திய சமத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து செயல்பட்டதன் விளைவுதான் முக்கியமான மனித வள குறியீடுகள் எல்லாவற்றிலும் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கான அடிப்படை காரணம். சுயமரியாதை இயக்கத்தின் இருப்பு இன்றும் வலுவாக இருப்பதற்கு ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் ஆட்சி ஒரு மிக முக்கியமான காரணம். இதனை அதன் கொள்கை எதிரிகளும் ஒப்புக்கொள்வார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் தமது ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்றே குறிப்பிடுகிறார். சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமத்துவம், பெண் விடுதலை, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கும் அரசாகவே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த வகையில் பெரியார் நூறாண்டுகளுக்கு முன்பு துவங்கிய சுயமரியாதை இயக்கம் இன்றளவும் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தை ஆள்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் இந்துத்துவ அரசியல் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் காலத்திலும் தமிழ்நாடு தனது சுயமரியாதை கொள்கை வழி நின்று, அந்த இந்துத்துவ அரசியலை எதிர்கொண்டு, தனது வளர்ச்சியை பதிவு செய்கிறது. மத அடிப்படையிலான அரசியலுக்கு எதிராகச் செயல்பட விரும்பும் கட்சிகளுக்கும் மாநிலங்களுக்கும் நம்பிக்கையூட்டும் முன்மாதிரியாக தமிழ்நாடு இருக்கிறது. அந்த வகையில் இன்னும் பல தசாப்தங்களுக்கு சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் வாழும், இந்தியாவை வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.
