பல விருதுகளை வாங்கிருக்கோம்... நிச்சயாக இதெல்லாம் செய்வோம்: ஈபிஎஸ்

EPS
அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் வரவேற்பில், தேனி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வருகிறார். சுற்றுப்பயணத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் விவசாய தொழிலை மேம்படுத்த கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை நிறுத்தியுள்ளது திமுக அரசு. அதேபோல, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதை, ரத்து செய்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் அவைகளை செயல்படுத்துவோம். 5 மாவட்ட மக்கள் முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தான் இருக்கிறார்கள். புரட்சித் தலைவி அவர்கள் காலத்தில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினோம். உச்சநீதிமன்றம் அதை 152-ஆக உயர்த்த அதிமுக ஆட்சியில் தான் தீர்ப்பளித்தது. பேபி அணையை பலப்படுத்தும் பணியை துவக்கிய போது, அதற்கு தடை விதித்தது கேரள அரசு. ஆனாலும் அணையை பலப்படுத்த, நானே கேரள முதல்வரை சந்தித்தேன். திமுக ஆட்சி வந்த பிறகு, அதன்மீது அக்கறையின்றி உள்ளார். இண்டி கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் உடன் பேசலாமே? மீண்டும் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளுக்காக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் காட்டுவோம். நான் விவசாயி என்பதால், அவர்களின் எண்ணங்களை நன்கு அறிவேன். நிச்சயமாக அவற்றை நிறைவேற்றுவோம். ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் மீது இன்று தாக்குதலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரை தாக்குகின்றனர். சட்டம் ஒழுங்கு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள் கொரோனா காலத்தில் மக்களுக்கு ஓராண்டு உதவினோம். மக்களை காத்தோம். விலைவாசி உயரவில்லை. ரேஷன் கடைகளில் இலவசமாக அனைத்து பொருட்களையும் வழங்கினோம். அம்மா உணவகம் மூலம் ஏழைகளுக்கு உணவு வழங்கினோம். தேசிய அளவில் பல விருதுகளை அதிமுக அரசு குவித்தது எனக் கூறினார்.
