அதிமுகவை யாராலும் அடிமையாக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

EPS
கோத்தகிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அப்பகுதி மக்களும், அதிமுக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆரின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து, மரியாதை செய்தார். தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கோத்தகிரியில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலை, இப்பகுதி மக்களோடு வாழ்ந்து மறைந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக் கொடுத்தது அதிமுக அரசு. விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதம் ஆகியும், இப்பகுதி மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. விலைவாசி உயர்ந்து, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும்போது கோத்தகிரியில் புரட்சித் தலைவி அம்மாவால் நிறுவப்பட்ட புரட்சித் தலைவர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என என்னிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இங்கு கோத்தகிரியில் மக்கள் வெள்ளத்தை பார்க்க முடிகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றியடைந்து முதலிடத்திற்கு வரும். இரண்டாவது இடத்திற்குதான் போட்டி நடந்துவருகிறது. கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும், டாஸ்மாக்கில் ரூ.10 வாங்குவதிலும், குடும்ப ஆட்சியிலும், பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவதிலும் திமுக அரசுதான் Role Model. திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி பொதுச்செயலாளர் உதயநிதி, மகளிரணி செயலாளர் கனிமொழி என திமுகவினரின் முக்கிய பொறுப்புகள் அனைத்தும் ஒரு குடும்பத்தினரிடமே உள்ளது. ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது, அதனால் தான் அதிமுக கூட்டணி குறித்து தவறான பொய் செய்திகளை வெளியிடுகின்றார். அதிமுக யாருக்கும் அடிமை இல்லை, அதிமுகவை யாராலும் அடிமையாக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளை சுயமரியாதையோடு நடத்திவரும் கட்சி அதிமுக. கூட்டணி கட்சிகளை திமுக அடிமையாக நடத்திவருகிறது. சாறை உறிஞ்சிவிட்டு சக்கையை மட்டுமே திமுக கூட்டணிக்கு தருகிறது” என்றார்.
