விஜயை அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் கைது செய்யலாம்.. ஆனால் அடுத்த நாளே: அண்ணாமலை

விஜயை அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் கைது செய்யலாம்.. ஆனால் அடுத்த நாளே: அண்ணாமலை
X

Annamalai & Vijay

அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை கைது செய்யலாம் ஆனால் அடுத்த நாளே ஜாமின் கிடைக்கும் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, கோல்ட்ரிப் இருமல் சிரப் குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பேசிய அண்ணாமலை, ''காஞ்சிபுரத்தில் செயல்பட்ட நிறுவனத்தின் மருந்தினை இந்தியா முழுவதும் அனுப்புகின்றனர். இந்த மருந்து கெட்டுப் போய்விட்டது என்று சொல்ல முடியாது. இது கெட்டுப் போனதைப் போல தெரியவில்லை, இதில் தேவையில்லாத பொருளை கலந்து இருப்பது போல தெரிகிறது, அதனால் இது விஷமாக மாறி இருக்கிறது. இது கவனக்குறைவாக நடந்தை போல தெரியவில்லை. குறிப்பிட்ட பேட்ச்சில் மட்டும் இது நடந்துள்ளது. சம்மந்தப்பட்ட நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்தார். கரூர் விவகாரத்தை பொருத்தவரை தவெக தலைவர் விஜயை முதல் குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்தால் வழக்கு நிற்காது. ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுன் வழக்கில் அப்படித் தான் நடந்தது. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் கைது செய்யலாம், ஆனால் அடுத்த நாளே ஜாமின் கிடைக்கும். இது சின்ன பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்கு சமம். அரசு உறுதியாக இருந்தால் யார் தவறு செய்திருக்கிறார்களோ? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் முதல் தமிழக வெற்றிக் கழகத்தில் பரபரப்புரைக்கு அனுமதி வாங்கிய கீழ்மட்ட நிர்வாகிகள் வரை விசாரிக்கப்பட வேண்டும். தவெக மீது சில தவறுகள் இருக்கிறது. சில விஷயங்கள் அவர்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் விஜயை குற்றவாளியாக மாற்ற வேண்டும் என நினைத்தால் அது முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை'' எனவும் தெரிவித்தார். கரூர் சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. புரட்சி குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருக்கையில், தமிழக வெற்றி கழகத்திற்கு பாஜக அடைக்கலம் கொடுக்கின்றது என்று சொல்வதற்கு திமுகவிற்கு என்ன உரிமை இருக்கிறது?'' என கேள்வி எழுப்பினார்.

Next Story