நிபந்தனைகளுடன் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி!!

நிபந்தனைகளுடன் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி!!
X

EPS

நிபந்தனைகளுடன் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

கரூரில் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்ததை தொடர்ந்து, மதுரை ஐகோர்ட்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை ஏற்படுத்தும் வரை தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் பிரசார கூட்டங்களை நடத்த அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டி நாமக்கல் மாவட்ட போலீசார் மாநில நெடுஞ்சாலைகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய அனுமதி மறுத்துவிட்டனர். மேலும் தனியாருக்கு சொந்தமான பட்டா இடங்களை தேர்வு செய்து அனுமதி கோருமாறு அ.தி.மு.க.வினருக்கு போலீசார் அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி 8-ந் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளிலும், 9-ந் தேதி நாமக்கல், பரமத்திவேலூர் தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வார் என அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் அறிவுறுத்தல்படி அ.தி.மு.க. நிர்வாகிகள் தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து சில நிபந்தனைகளுடன் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி அளித்தனர். இது குறித்து முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தங்கமணி கூறியதாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) மாலை 5 மணி அளவில் திருச்செங்கோடு கரட்டுபாளையம் பகுதியிலும், 6.30 மணி அளவில் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியிலும் பிரசாரம் செய்ய உள்ளார். நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி அளவில் நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியிலும், 6.30 மணி அளவில் பாண்டமங்கலம் பகுதியிலும் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரசாரம் செய்ய உள்ளார்.இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும். அலைகடலென திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Next Story