பொதுக் கூட்டங்களுக்கு விதிமுறைகளை வகுக்க அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு

பொதுக் கூட்டங்களுக்கு விதிமுறைகளை வகுக்க அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு
X

Tn govt

நவம்பர் 6 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் செப்.27 ஆம் தேதி, கரூர் மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரும் வழக்கை விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை மாநிலத்தில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோக்கள் நடத்த அனுமதி இல்லை” என திட்ட வட்டமாக தெரிவித்தது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணியில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளைப் பெற்று விரைவில் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வருகிற நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Next Story