காமாலைக்கண் உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியும்: ஈபிஎஸ்க்கு சேகர்பாபு பதிலடி

செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சித் துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குக் காட்டமான பதிலடியைக் கொடுத்தார். செய்தியாளரை சந்தித்த அமைச்சர் பேசிய போது, “பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, செங்கல்பட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, ஆலப்பாக்கம் ஊராட்சியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே நேரத்தில் 53 பேருந்துகள் நிற்கும் வகையில் நடைமேடைகளும், நாளொன்றுக்கு 600 பேருந்துகள் வந்து செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.உணவகங்கள், ஏடிஎம் மையங்கள், டாக்ஸி புக்கிங் தளம், முதலுதவி மையம் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வறைகள், பேருந்து நிலையத்தின் அருகிலேயே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அழகிய குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையம் வரும் ஜனவரி 30-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முறைப்படி கொண்டு வரப்படும்” என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர் பொங்கல் பரிசு மற்றும் மடிக்கணினி திட்டங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி வைக்கும் விமர்சனங்கள் பற்றிக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், அரசு எதைச் செய்தாலும் அதைக் குறை சொல்வதையே எடப்பாடி பழனிசாமி வழக்கமாக வைத்துள்ளார். காமாலைக்கண் உள்ளவர்களுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். அங்க பாருங்க, இப்போது ஒரு மஞ்சள் நிறப் பேருந்து செல்கிறது, அதைப்போலத்தான் அவருக்கு எல்லாம் தெரிகிறது என கிண்டலாகப் பேசினார். முடிவில், வரும் ஜனவரி 9-ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஜனநாயகன் திரைப்படம் குறித்த கேள்விக்கு, அமைச்சர் எந்தப் பதிலும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
