இன்று முடிவை அறிவிக்கும் ஓபிஎஸ்..!! யாருடன் கூட்டணி?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார்? என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறி விட்டு கூட்டணி குறித்து ஓ.பன்னீர்செல்வம் காலதாமதம் ஏற்படுத்தி வந்ததால் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவிற்கும், எம்.பி தர்மர் அதிமுகவிற்கும் சென்று விட்டனர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்கு அழைக்க திமுக மற்றும் தவெக தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படும் நிலையில் தேனியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், ''அதிமுக தயவால் 3 முறை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் தன்னை வாழ வைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது” என கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ''கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட்டு விட்டதா?" என கேட்டதற்கு, ''கூட்டணி குறித்து இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு, எனது முடிவை தெரிவிப்பேன்'' என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
