இதுதான் திராவிட மாடல் ஆட்சி...! விபத்தில் இறந்தால் 2 லட்சம்...கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்: நயினார் நாகேந்திரன்

இதுதான் திராவிட மாடல் ஆட்சி...! விபத்தில் இறந்தால் 2 லட்சம்...கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்: நயினார் நாகேந்திரன்
X

Nainar Nagendran

யார் விபத்தில் இறந்து போனாலும் அவர்களுக்கு இரண்டு, மூன்று லட்சம் ஆனால், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சண்முகம் சாலையில் பாஜக சார்பில் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மக்களிடையே பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திராவிட மாடல் அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல்லாயிரக்கணக்கானோர் இந்த கூட்டத்தில் கூடியிருக்கிறார்கள். இந்த கூட்டணி ஆட்சி மாற்றத்திற்கு அச்சாரமாக விளங்கும் கூட்டணி. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. பாதாள சாக்கடை பணிகளை ஒழுங்காக செய்யாததால் கழிவு நீர் தெருக்களில் தேங்கி நிற்கும் பிரச்சனை இருக்கிறது. பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் இறந்து போனார்கள். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து போனார்கள். கள்ளக்குறிச்சிக்கு போகாத கால்கள்; கரூருக்கு மட்டும் போனது ஏன் என்ற கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது. கரூரில் நடந்த சம்பவத்திற்கு இரவோடு இரவாக முதலமைச்சர் வந்தார். இரவோடு இரவாக 41 உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ய காரணம் என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் பெறாத, இந்த செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு எத்தனை ஆத்திரம் இருக்கும். இந்த ஆட்சியில் லஞ்சம் ஊழல் சாதாரண மக்கள் எதையும் வாங்க முடியவில்லை, விலைவாசி விண்ணை முட்டிக்கொண்டு இருக்கிறது. தமிழகம் வளர்ச்சி அடைந்தது எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே வளர்ச்சி அடைந்திருக்கிறது தெரியுமா? பாலியல் குற்றங்களில் வளர்ச்சி அடைந்திருக்கிறது; பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52% அதிகரித்து இருக்கிறது; குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 19% அதிகரித்து இருக்கிறது; போக்சோ குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் வயதானவர்கள் கொலை அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. போதைப்பொருள் அதிகமாகிப் போனதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் பல படுகொலைகள் நடைபெறுகிறது. மொத்தம் 41 பேர் கரூரில் உயிரிழந்தார்களே; யார் காரணம்? அதற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக முதலமைச்சர் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். எதிர்க்கட்சிகள் எங்கு கூட்டம் நடத்தினாலும், அதற்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறார்கள். கரூரில் நடந்த விபத்திற்கு காரணம் அவர்கள் கேட்ட இடத்தில் அனுமதி தராதது தான். கொடுத்திருந்தால் நிச்சயம் இந்த சம்பவம் நடந்திருக்காது. அங்கே லத்தி சார்ஜ் நடந்து இருக்கிறது. செருப்பை கழட்டி வீசி இருக்கிறார்கள். இது எல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்ம முதலமைச்சர் என்ன செய்வார் என்றால், யார் விபத்தில் இறந்து போனாலும் அவர்களுக்கு இரண்டு, மூன்று லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிதியிலிருந்து கொடுப்பார்கள். ஆனால், கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்ச ரூபாய் கொடுப்பார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரை, அனைவரும் ஒன்றுபட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Next Story