உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை.. நெல்லையில் 2,000 போலீஸார் பாதுகாப்பு!!

அமித்ஷா
தமிழகம் முழுவதும் 7 இடங்களில் பாஜக சார்பில் பூத் கமிட்டி மண்டல நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இன்று நெல்லையில் முதல் மாநாடு நடைபெறுகிறது. வண்ணார்பேட்டை சத்திரம் புதுக்குளம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க இருக்கிறார். இதற்காக இன்று பிற்பகலில் அவர் தமிழகம் வர இருக்கிறார். கொச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வரவிருக்கிறார். பின்னர் ஹெலிகாப்டம் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை தளத்திற்குச்செல்லும் அவர், பின்னர் அங்கிருந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு அவரது வீட்டில் தேநீர் விருந்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து 3.25 மணிக்கு மாநாட்டு மேடைக்கு காரில் செல்கிறார். இந்த பூத் கமிட்டி மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். மாநாடு முடிந்ததும் ஹெலிகாப்டரில் மீண்டும் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
