வெறும் ரூ.2,500 ஊதிய உயர்வு கண் துடைப்பு! பணி நிரந்தரம் செய்யாதது ஏன்?: அண்ணாமலை

வெறும் ரூ.2,500 ஊதிய உயர்வு கண் துடைப்பு! பணி நிரந்தரம் செய்யாதது ஏன்?: அண்ணாமலை
X
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யாதது ஏன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என, கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களாக திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட, கண்ணன் என்ற ஆசிரியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனை கடினமான சூழலில் வாழ்க்கை இருந்திருந்தால், தற்கொலை என்ற மிக மோசமான முடிவை எடுக்கும் சூழலுக்கு, ஆசிரியர் கண்ணன் தள்ளப்பட்டிருப்பார் என்பது குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தக் கவலையும் இல்லை. பணி நிரந்தரம் கோரிப் போராடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற பெயரில், வெறும் ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்திருக்கிறது திமுக அரசு. பகுதி நேர ஆசிரியர்களின் ஒரே கோரிக்கை பணி நிரந்தரம் மட்டுமே. ஆனால், அதைக் குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இத்தனை ஆண்டு காலம் காத்திருந்த ஆசிரியப் பெருமக்களுக்கு, திமுக செய்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுகவினருக்கு, சாதாரண பொதுமக்களின் வலியும், வாழ்க்கையும் எப்படிப் புரியும்? என்று அதில் தெரிவித்துள்ளார்.

Next Story