எம்.பி.வேட்பாளர் தோற்றால் திமுக மாவட்ட செயலாளர்கள் டிஸ்மிஸ்!

எம்.பி.வேட்பாளர் தோற்றால் திமுக மாவட்ட செயலாளர்கள் டிஸ்மிஸ்!
மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை அண்ணா அறிவலாயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட அளவில் 234 தொகுதிகளுக்கு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேசிய முதல்வர் ஸ்டாலின் விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாகக் காணொலி மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முதல் கட்ட விளக்கத்தை அளித்துள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, நம்மை எதிர்நோக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் அடைவது போன்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்தியக் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும் - வலுவான மாநிலக் கட்சிகளும் - இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பாரதீய ஜனதா கட்சி ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. இந்தியா கூட்டணிதான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்

எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பணியை கடந்த ஆறு மாதத்துக்கு முன்பே நாம் தொடங்கினோம். நமது வெற்றிக்கு அடித்தளமாக விளங்கக்கூடிய வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்தோம் என்பதையும் திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார் . இதுவரையில் அவர்களுக்கான மூன்று பயிற்சி பாசறைக் கூட்டங்கள், தேர்தல் சிறப்பு மாநாடுகளைப் போல நடந்துள்ளன.அடுத்ததாக வடக்கு மண்டல பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணாமலையிலும், சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் நடைபெறவுள்ளது என்ற தகவலையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்..

இந்தப் பயிற்சி பாசறைக் கூட்டங்களில் நாம் எடுத்துச் சொன்னதைச் செயல்படுத்தினாலே போதும். முழுமையான வெற்றியை நாம் அடைந்து விடலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட 39 தொகுதிகளை வென்றோம் என்றால், நடக்க இருக்கும் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். எந்தவொரு தனிமனிதரையும் விட இயக்கமும் - இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம் என்று முதல்வர் ஸ்டாலின் அழுத்தமாக கூறியுள்ளார்.

மக்கள் நன்றாக இருக்கிறார்கள். அதனை வாக்குகளாக மாற்றுவதற்கு உழையுங்கள். உழைப்பும் செயல்பாடும்தான் வெற்றியைப் பெற்றுத் தரும். திட்டமிட்டு உழையுங்கள். தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற உழையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில், நமது வேட்பாளர்கள் யாராவது தோல்வி அடைந்தால் அந்த மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவீர்கள் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் நாம் மற்றும் நம்முடைய கூட்டணிக் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும். தோல்வியைத் தழுவும் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்படுவீர்கள் என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும்,சரியாக செயல்படாத 7 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை மு.க.ஸ்டாலின் வாசித்ததாகவும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாவட்ட செயலாளர்களுக்கு மிக கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற கட்சியின் திட்டத்தை செயல்படுத்துவதில் 2 அமைச்சர்கள் உள்ளிட்ட சில மாவட்ட செயலாளர்கள் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதை முதல்வர் கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பணிகளில் தொய்வு இருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் எனவும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்து தொகுதி பார்வையாளர்கள் வாரம் ஒரு முறை அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொகுதி பார்வையாளர்களுக்கு பல மாவட்ட செயலாளர்கள் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என்று கட்சி தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன. இதை அடிப்படையாக வைத்து தான் ஸ்டாலின் இன்று எச்சரித்திருப்பதாக தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தல்களும், எச்சரிக்கைகளும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக, விசிக, கொமதேக உள்ளிட்டவற்றுக்கு பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதே நேரத்தில் திமுக தொகுதி பொறுப்பாளர்கள், தொகுதி பார்வையாளர்களும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலினால் எச்சரிக்கப்பட்ட 7 மாவட்ட செயலாளர்களில் 4 பேர் வடமாவட்டங்களையும், 3 பேர் த தென்மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags

Next Story