அரசுப்பள்ளிகள் சீரழிகின்றன... மதுபோதையில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran
திருப்பத்தூர் மேல்சாணங்குப்பம் அரசுத் தொடக்கப்பள்ளியில் மதுபோதையில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் திரு. பாரத் அம்பேத்கர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “திருப்பத்தூர் மேல்சாணங்குப்பம் அரசுத் தொடக்கப்பள்ளியில் மதுபோதையில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் திரு. பாரத் அம்பேத்கர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. அதிலும் அந்தத் தலைமையாசிரியர் தொடர்ந்து 4 பள்ளிகளில் பாலியல் புகாரில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபட்டிருப்பது, திராவிட மாடல் ஆட்சியில் அரசுப்பள்ளிகள் சீரழிந்துள்ளதைக் காட்டுகிறது. பணிநேரத்தில் மது அருந்தியது தொடங்கி, தொடர்ந்து மாணவர்களிடம் அத்துமீறுவது வரையிலான கொடூரச் செயல்களில் ஈடுபடும் அளவிற்கு அந்தத் தலைமையாசிரியருக்கு துணிச்சல் எப்படி வந்தது? ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்கள் பாதுகாப்பைத் தூக்கியெறிந்து, விளம்பரத்தை மட்டும் தூக்கிப்பிடிக்கும் திமுக ஆட்சியில் எப்படியானாலும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் தான் குற்றம் புரியத் தூண்டியதா? இது போன்ற குற்றங்கள் வெளிவரும் போதெல்லாம், கண்துடைப்புக்காக கைது செய்துவிட்டு, "பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்" என முழங்குவதும், பின் செய்தியடங்கியதும், குற்றம்புரிந்த ஆசிரியரை வேறு கல்விநிலையத்துக்கு இடமாற்றம் செய்து, மாணவர்களின் பாதுகாப்பைப் பலியிடுவதும் தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா? தேர்தல் விளம்பரங்களில் 'அப்பா' எனும் வேடம் தரிக்கும் கடனுக்காகவாவது, அரசுப் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டுகொள்வாரா? கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களையே மாணவர்கள் பாதுகாப்பைக் காவு வாங்கும் கூடாரங்களாய் மாற்றிய திமுக அரசின் மெத்தனமே அதன் பகல் கனவுகளுக்கு சமாதி கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
