அன்று ஊழல் வழக்கில் கைது : தெலுங்கானா முதல்வரான ரேவந்த் ரெட்டி யார்?
ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா மாநிலத்தில் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திரசேகரராவின் குடும்ப ஆட்சியை விரட்டி, காங்கிரஸ் ஆட்சியை உருவாக்கிய முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பின்னணி பல சுவாரஸ்யங்கள் நிறைந்தது. பல கட்சிகள் மாறிய அவரது அரசியல் பயணம் பற்றி இப்போது விரிவாக காண்போம்.
தெலுங்கானா மாநிலம் 2014ஆம் ஆண்டு உருவானதில் இருந்தே அங்கு ஆட்சி நடத்திவந்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சட்டசபை தேர்தலில் காங்கிரசால் வீழ்த்தப்பட்டது.
119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் 64 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது.காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணமாக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி செயல்பட்டதால், அவர் மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவரது அரசியல் பயணம் பற்றி காண்போம்.
பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் மகபூப்நகர் மாவட்டத்தில் 1969-ஆம் ஆண்டு பிறந்த அனுமுலா ரேவந்த் ரெட்டி, மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டவர். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரெட்டி, அப்போது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யில் இணைந்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த எஸ். ஜெய்பால் ரெட்டியின் நெருங்கிய உறவினரான கீதாவை 1992 ஆம் ஆண்டு ரேவந்த் ரெட்டி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
பின்னர் ஏ.பி.வி.பி.யில் இருந்து விலகி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 2009-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக கோடங்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா தனிமாநிலம் உருவான பிறகு,2014-ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக ரேவந்த் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டப்பேரவை மேல்சபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க நியமன எம்எல்ஏ ஒருவருக்கு ரேவந்த் ரெட்டி லஞ்சம் கொடுத்ததாக ஒரு ‘ஸ்டிங்-ஆபரேஷன்’ செய்யப்பட்டது. அந்த வீடியோ வெளியாகி சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அந்த ஆண்டு மே மாத இறுதியில் ரேவந்த் ரெட்டியை ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது.
அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தெலுங்கானா உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ரேவந்த் ரெட்டி 2015-ஆம் ஆண்டு, ஜூலை 1-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். அடுத்தடுத்து நடந்த அரசியல் மாற்றங்களால், கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் தெலுங்கு தேச உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதே ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் வேட்பாளரிடம் ரேவந்த் ரெட்டி தோல்வியடைந்ததார். ஆட்சி முடிவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே சட்டசபையை கலைத்து தேர்தலை நடத்தி முதல்வர் சந்திரசேகரராவ் வெற்றி பெற்றார்.
2018 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, 2019 மக்களவைத் தேர்தலில் மாநிலத்திலேயே மிகப்பெரிய தொகுதியான மல்காஜ்கிரியில் போட்டியிட ரேவந்த் ரெட்டிக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. அதில் அவர் 10,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021-ஆம் ஆண்டில், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக ரேவந்த் ரெட்டியை தேர்ந்தெடுத்து, மிகப்பெரும் பொறுப்பை காங்கிரஸ் மேலிடம் வழங்கியது.
கர்நாடகாவுக்குப் பிறகு தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமை அதிக கவனம் செலுத்தியதால் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேரா மாநிலம் முழுவதும் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த பயணத்தின்போது ரேவந்த் ரெட்டி அவர்களுடன் தொடர்ந்து சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்ராவிலும் பங்கேற்ற ரேவந்த் ரெட்டி, அவருடன் நெருக்கமான வட்டத்தில் இணைந்தார்.
காங்கிரஸ் மேலிடம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுப்பதாக தெலுங்கானா மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்தாலும் தனக்கே உரித்தான பாணியில் செயல்பட்டு மக்களிடம் செல்வாக்கு பெற்றவராக ரேவந்த் ரெட்டி வளர்ந்தார்.
தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அவரோடு வாக்கு சேகரித்ததால், தொண்டர்களிடையே ரேவந்த் ரெட்டி மிகப்பிரபலமாக இருந்தார். சுவரொட்டிகளில் ரெட்டி தெலுங்கானா காங்கிரஸின் 'ஜோதியை முன்னெடுத்துச் செல்பவர்’ என்று வர்ணிக்கப்பட்டார்.
தேர்தலுக்காக மிகப் பெரிய ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்தார். இவருக்கு பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் அமைப்பாளரான சுனில் பணியாற்றினார்.காங்கிரசில் இருந்து ஒதுங்கி இருந்தவர்களை ஓரணியில் திரட்டி, தேர்தல் பணியில் ஈடுபடுத்திய பெருமை ரேவந்த் ரெட்டிக்கு உண்டு.
தெலுங்கானாவில் கேஸ் சிலிண்டர்களை சாலையில் வைத்து நிர்மலா சீதாராமனை வம்புக்கு இழுத்து போராட்டம் நடத்தியும், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என மக்களை திரட்டி ரேவந்த் ரெட்டி மாஸ் காட்டியது ,காங்கிரசை நோக்கி மக்களை திரள செய்தது.
தேர்தல் பிரச்சாரங்களில் கே.சி.ஆர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்த ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவில் கே.சி.ஆரின் குடும்ப ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம் என்று சபதம் செய்தார். கே.சி.ஆரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் ரேவந்த் ரெட்டி எல்லை மீறி விமர்சித்ததாக புகார்கள் எழுந்தன.
கே.சி.ஆரின் சொந்தத் தொகுதியான கஜ்வேலுடன் சேர்ந்து, அவர் காமாரெட்டி தொகுதியில் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டார். அதே நேரத்தில் ரேவந்த் ரெட்டி தனது தொகுதியான கோடங்கலுடன் சேர்த்து அவர் காமாரெட்டி தொகுதியிலும் போட்டியிட்டார்.இது இருவருக்குமிடையே ஒரு நேரடி மோதலை உருவாக்கியது முதல்வரை எதிர்த்து முதல்வர் வேட்பாளர் போட்டி என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் காமாரெட்டி தொகுதியில் கே.சந்திரசேகரராவ் மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரையும் பாஜக வேட்பாளர் கே வெங்கட் ரமண ரெட்டி
வீழ்த்தி சாதனை படைத்தார். இருப்பினும் ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதியிலும் சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
தேர்தலுக்கு முன்னர் தனது எக்ஸ் பக்கத்தில், ”பத்து ஆண்டுகளாக நடந்த பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மக்களின் விருப்பங்கள் ஆட்சி செய்யும் காலத்தை தொடங்கிவைப்போம். கைகோப்போம் தெலங்கானாவை உயர்த்துவோம்” என ரேவந்த் ரெட்டி பதிவிட்டிருந்தார் அவரது பதிவு தற்போது நடைமுறைக்கு வந்து விட்டது.
முதல்வராக பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டிக்கு, மிகப்பெரிய சவாலாக இருப்பது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான்.அதனை நோக்கி அவர் செயல்பட தொடங்கியுள்ளார்.