செங்கை பள்ளிகளில் கலைத்திருவிழா
கலைத்திருவிழா
செங்கல்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் கலைத்திருவிழா நடந்தது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் இணைந்து நடத்தும், மாவட்ட அளவிலான மாணவ - மாணவியர் பங்கேற்கும் போட்டிகள் துவக்க விழா, செங்கல்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் - பொறுப்பு - வெற்றிச்செல்வி வரவேற்றார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, கலைத்திருவிழாவை துவக்கி வைத்து பேசியதாவது: கலைத்திருவிழா போட்டியில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 32 வகையான போட்டிகளும், 9 மற்றும் 10ம் வதுப்பு மாணவர்களுக்கு, 72 வகையான போட்டிகளும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 72 வகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. வட்டார அளவில் வெற்றிபெற்று, முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்கள், மாநில அளவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு, பள்ளி கல்வித்துறைக்கு, 38,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்காக மட்டுமே, அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதோடு, 31,000 அரசு பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்களுக்கு, 404.41 கோடி ரூபாய் செலவில், காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், 250 பள்ளிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
Tags
Next Story