வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: ஜவாஹிருல்லா கண்டனம்
ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் ரமலானை முன்னிட்டு அவர்களின் அறையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று எதிர்ப்பு தெரிவித்து மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்பியதாகத் தெரிகிறது. அத்தோடு இல்லாமல் வாக்குவாதம் செய்து வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒரு இலங்கை மாணவர் உட்பட 5 வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி இருக்கும் ‘ஏ’ பிளாக்கில் நடந்துள்ளது. முஸ்லிம் மாணவர்களின் மடிக்கணினிகள், அலைப்பேசிகள் உடைமைகள் போன்றவற்றையும் வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி உள்ளது. தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் நான்கு பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். குற்றவாளிகளைக் கைது செய்வதில் குஜராத் மாநில அரசு போதிய முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை. நமது நாட்டின் விருந்தினர்களாகக் கல்வி பயில வந்துள்ள மாணவர்கள் புனித ரமலான் மாதத்தில் தமது மத வழிப்பாட்டை தமது தங்குமிடத்தில் நடத்தியதைப் பொறுத்துக் கொள்ளாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. பாஜக ஆளும் மாநிலங்களில் மாணவர்களிடையே எந்த அளவிற்கு மதவெறி புகுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றாக இது அமைந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டு இருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது என்றால்,
அது மிகையல்ல. மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைத்தெரிவித்துக் கொள்கிறோம். குற்றவாளிகளைச் சட்டத்தின் பிடியில் நிறுத்தவும் தனிமனிதவழிபாட்டு உரிமையைக் காக்கவும் அரசு உரிய முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும். இப்படிக்கு எம் .எச். ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி