மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு!!

CM Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர், மக்கள்தொகை குறைவாக உள்ள காரணத்தினால் பாராளுமன்ற தொகுதியை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 39 தொகுதியில் இருந்து 8-ஐ குறைத்து 31 ஆக மாற்ற உள்ளனர். 39 பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, இது மாநிலங்களின் உரிமை தொடர்பான பிரச்சனை. மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. 8 பாராளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும். தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். மார்ச் 5-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கடந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.