செய்தியாளர் சந்திப்பில் பேச முடியாமல் திணறிய முதலமைச்சர்... பாதியில் முடிந்த பிரஸ்மீட்!!
Cm Stalin
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித்தீர்த்ததால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தூத்துக்குடியின் பெரும்பலான பகுதிகள் மழைநீர் சூழ்ந்தது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்த நிலையில், வெள்ள பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மழை வெள்ளம் பாதிப்பு குறித்தும், நிவாரண தொகை குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே. என்.நேரு மற்றும் சபாநாயகர் அப்பாவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட பல மடங்கு அதிக மழை தென்மாவட்டங்களில் பெய்துள்ளது. சில இடங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1801 ஆம் ஆண்டுக்கு பின் தற்போதுதான் அதிக கனமழை பெய்துள்ளது.
12,653 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும். லேசான பாதிப்புகளுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.
நிவாரண நிதி குறித்து முதலமைச்சர் அறிவித்தபோது, குறுக்கிட்ட செய்தியாளர்கள் தாமிரபணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு குறித்து அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் அமைதியாக இருக்க, அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அதில், “ அணைகளில் 45,000 கன அடி நீர் திறந்து விடப்படுவதையும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டது. ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாளும், மீட்பு பணிகளாலும், காவல்த்துறை உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்பாலும் தான் பலர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக பலர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் அதிக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது” என்றார்.
எனினும் அமைச்சரின் பதிலை தொடர்ந்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் ஸ்டாலின். “2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மனதில் வைத்து கொண்டு பேச வேண்டும். அது இல்லை இது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
அடுத்ததாக தாமிரபணி ஆற்று நீர் செல்லும் ஆத்தூர்-முக்காணி பகுதியில் திமுக அரசு அணை கட்டுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் “அது குறித்து ஆய்வு செய்து கொண்டு வருகிறோம். எதிர்பார்ப்புப்படி அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர முயன்றார்.
கடைசியா நேரில் பிரதமரை சந்தித்துள்ளீர்கள். நிவாரண நிதி பற்றி பிரதமர் எதாவது பதில் சொன்னார்கள்..? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு “பிரதமர் 20 நிமிடங்கள் எங்களை உட்கார வைத்து பேசினார். எல்லாவற்றையும் விவரமாக கேட்டார். வாய்மொழி சொன்னதை மனுவில் குறிப்பிட்டுள்ளீர்களா என கேட்டார். மனுவில் இருப்பதாக சொன்னோம். உடனே கவனிப்பதாக பிரதமர் சொன்னார்” என முதலமைச்சர் பதிலளித்தார்.
அடுத்ததாக செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றபோது செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து முதலமைச்சர் புறப்பட்டு சென்றார்.