திராவிட மாடல் அரசு அமைய காரணமாக இருந்தவர்கள் பெண்கள்: உதயநிதி ஸ்டாலின்

udhayanithi stalin
திருவாரூர் அருகிலுள்ள பழவனக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் குழு கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்களை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுய தொழில் தொடங்க ஊக்குவிப்பது வங்கி கடன் வழங்குவது என துறைக்கு அமைச்சராக, முதலமைச்சர் இருந்தபோது பல்வேறு முன்னேற்றங்களை செய்துள்ளார். கிராமப்புறங்களில் 3.30 லட்சம் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1.50 லட்சம் என மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 54 லட்சம் மகளிர்கள் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இந்த அரசு பொறுப்பேற்ற நாட்களில் இருந்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி வங்கி கடனாக பெற்று தந்துள்ளோம். மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8-ந்தேதி சென்னையில் முதலமைச்சர் ரூ. 3,019 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க உள்ளார். இப்படி வழங்கப்படுகின்ற இந்த கடன்களை எந்த அளவிற்கு பயனுள்ள வகையில் செலவிடுகின்றார்கள். அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது ஆய்வு செய்ய வேண்டும், அவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் வாழ்வாதார மேம்பாடு, மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தில் இந்த ஆய்வினை தொடங்கி உள்ளோம். இங்குள்ள 30 குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் தங்களது செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் உள்ளூர் தேவைகளாக வாய்க்கால்கள் தூர்வார வேண்டும், பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும், பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திராவிட மாடல் அரசு அமைய காரணமாக இருந்த பெண்களை சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார்.