திமுக இளைஞர் அணி மாநில மாநாடு துவக்கம்
கொடியேற்றம்
திமுக இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டு திடலை காலை 9 மணி அளவில் வந்தடைந்தார். அவரை தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திறந்த வாகனத்தில் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றபடி மாநாட்டு திடலை வந்தடைந்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தனர்.
மாநாட்டு திடலின் முகப்பில் கொடிக்கம்பம் அருகே ஆயிரக்கணக்கில் திமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் நான்கு பேரின் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் முன்னிலையில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டு திடலை எம்.எல்.ஏ. எழிலரசன் திறந்து வைத்தார். இளைஞரணி முழக்க பாடலுன் மாநாடு தொடங்கியது.