ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய துரை வைகோ வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய துரை வைகோ வலியுறுத்தல்

ஒன்றிய அரசு தலையிட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய துரை வைகோ வலியுறுத்தல் 

ஒன்றிய அரசு தலையிட்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய துரை வைகோ வலியுறுத்தல்

துரை வைகோ அறிக்கையில் கூறியிருப்பதாவது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்டியாலா கிருஷ்ண சைத்தன்யா என்பவர் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக பணியாற்றி வருகின்றார். இவர் தாம்பரத்தை அடுத்த மடப்பாக்கத்தில் குடியிருக்கிறார். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை மெரினா கடற்கரைக்குச் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். முதல்நாள் இரவே தன்னுடைய மகன் பத்ரியை தூக்கிட்டு கொலை செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் 50 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்து விட்டதாகவும், தன்னால் கடன் வாங்கி வட்டி கூட கட்ட முடியவில்லை என்றும், அதனால் தன் மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நண்பர்களிடம் அலைபேசியில் தெரிவித்து விட்டு கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அலைபேசி சிக்னலை வைத்து தற்கொலைக்கு முயன்ற கிருஷ்ண சைத்தன்யாவை காவல்துறையினர் பிடித்து விசாரணைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தை தான் இழந்துள்ளதாகவும், கடன் பிரச்சனை அதிகமாகி விட்டதால் தன் அன்பு மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், தான் இறந்துவிட்டால் பார்த்துக் கொண்டு இருந்த வேலை மனைவிக்கு கிடைக்கும் எனவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். தற்போது அவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். கடந்த மூன்று நாட்களில் நடந்துள்ள இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். மூன்று நாட்களுக்கு முன்னர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டார். தமிழ்நாட்டில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 131 நாட்கள் கழித்து கடந்த மார்ச் 6 ஆம் தேதி ஆளுநர் அந்த மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் 23 ஆம் தேதி சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு மறுநாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து, அகில இந்திய ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தார்கள். இருப்பினும், அந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு சட்ட அமைச்சர் மாண்புமிகு ரகுபதி அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் அடிக்கடி மரணங்கள் நிகழ்வது தொடர்கதை ஆகிவிட்டது. தமிழ்நாடு அரசு சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. இருப்பினும், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இதனால் தற்கொலைகள் தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பிலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வை வருங்காலங்களில் ஏற்படுத்துவோம். இது தமிழ்நாட்டு பிரச்சனை மட்டுமல்ல. இந்தியா முழுவதும் அப்பாவி மக்கள் ஆன்லைன் சூதாட்டத்தால் தங்கள் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நாடு முழுவதும் முழுமையாக தடைசெய்து சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Tags

Next Story