விழுப்புரத்தில் மழை நிவாரணம் கேட்டு வருகிற 21-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

விழுப்புரத்தில் மழை நிவாரணம் கேட்டு வருகிற 21-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

Edapadi Palanisamy

விழுப்புரத்தில் மழை நிவாரணம் கேட்டு வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் பல்வேறு வகைகளில் துன்பப்படுவது வாடிக்கையாகிவிட்டது. மக்கள் போற்றும் ஒரு நல்ல அரசுக்கு எடுத்துக்காட்டு, அந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதும்; மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பதும்; இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் முன்கூட்டியே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைக் காப்பாற்றுவதுமாகும். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, ஸ்டாலின் தலைமையிலான கடந்த 43 மாதகால தி.மு.க. ஆட்சியில் மக்கள் பெருந்துன்பங்களுக்கு ஆளாகி, தங்களது இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தி.மு.க. அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமீபத்தில் உருவான ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையாலும், எவ்வித முன்அறிவிப்பும் இன்றி நள்ளிரவில் திடீரென சாத்தனூர் அணையில் இருந்து 1 லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீரைத் திறந்துவிட்டதாலும் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், மழையால் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்களுக்கான உரிய நிவாரணத் தொகையையும் வழங்காத ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயப் பெருமக்கள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story