நடுரோட்டில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
EPS
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. விளம்பரத்தில் மட்டுமே ஆட்சிக்காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில், தன்னுடைய பணிகளை மேற்கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். வழக்கம் போல வெற்று விளம்பரங்களால் மடைமாற்ற முயற்சிக்காமல், இத்தொடர் சம்பவங்களுக்கு பிறகாவது சட்டம் ஒழுங்கின் உண்மை நிலை உணர்ந்து செயல்படுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.