ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எடப்பாடி பழனிசாமி 11 ஆம் தேதி இறுதி முடிவு!!
இ பி எஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடக்க தொடங்கி உள்ள நிலையில் அ.தி.மு.க. போட்டியிடுமா? போட்டியிடாதா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக சட்டசபைக்கு 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. இந்த 2 இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த போது தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் நேரடி பலப்பரீட்சை நடந்தது. தி.மு.க. தலைவர்கள் அங்கு வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்பதை கவுரவ பிரச்சனையாக மனதில் கொண்டு தீயாக வேலை பார்த்தனர். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இளங்கோவன் 66.82 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 25.75 சதவீத வாக்குகளே பெற முடிந்தது. இந்த தோல்வி காரணமாக அ.தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், "தி.மு.க. கூட்டணியினர் அதிகார பலத்தையும், பணப் பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்று விட்டனர்" என்று கூறினார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்த போது அ.தி.மு.க. புறக்கணித்தது. தேர்தல் நியாயமாக நடக்காது. பணத்தை அள்ளி வீசி வாக்காளர்களை திசை திருப்புவார்கள் என்று கூறி அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டது. விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் அதிகம் என்பதால் பா.ம.க.வை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் புறக்கணிப்பு முடிவை அ.தி.மு.க. மேற்கொண்டது. எடப்பாடி பழனிசாமியின் அந்த முடிவு மாறுபட்ட விமர்சனங்களை உருவாக்கியது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் தேர்தல் வந்து இருப்பதால் அ.தி.மு.க. என்ன முடிவு எடுக்கும் என்ற சூழல் நிலவுகிறது. இதில் இறுதி முடிவு எடுக்க 11-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர். பெரும்பாலான அ.தி.மு.க. தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. ஈரோடு கிழக்கில் மீண்டும் தோல்வியை தழுவினால் அது கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வுக்கு இருக்கும் இமேஜை பாதிக்கும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள். எனவே விக்கிரவாண்டியை போல இந்த தேர்தலையும் அ.தி.மு.க. புறக்கணிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் சில மூத்த தலைவர்கள் அ.தி.மு.க. கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். விக்கிரவாண்டியில் வன்னியர்கள் அதிகம் இருந்ததால் அங்கு கள நிலவரம் வேறுவிதமாக இருந்தது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒப்பிடக்கூடாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதற்கு நியாயமான எந்த காரணமும் தற்போது இல்லை என்றும் கூறி வருகிறார்கள். ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்றால் 2026 சட்டசபை தேர்தலை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். அ.தி.மு.க. தலைவர்களின் இந்த மாறுபட்ட கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். எனவே 11-ந்தேதி ஆலோசனைக்கு பிறகு அவர் இறுதி முடிவை வெளியிட வாய்ப்புள்ளது. இதற்கிடையே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 6 பேரிடம் ஆவணங்களை பெற்று ஆய்வு செய்து வருகிறது. வருகிற 13-ந்தேதி இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவை வெளியிட இருக்கிறது. எனவே அந்த முடிவை பார்த்து விட்டு அ.தி.மு.க. போட்டியிடுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.