காலாவதியான ரவையில் உப்புமா - அதிகாரிகளை விளாசிய வேல்முருகன்

காலாவதியான ரவையில் உப்புமா - அதிகாரிகளை விளாசிய வேல்முருகன்

வேல்முருகன்

அரியலூர் மாவட்டம் திடீர்குப்பம் அருகிலுள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் 1,141 பள்ளி, 190 கல்லுாரி மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு பள்ளி மாணவர் என்றால் தலா 1,000 ரூபாயும், கல்லூரி மாணவர் என்றால் தலா 1100 ரூபாயும் உணவுக்காக அரசு ஒதுக்கி வருகிறது.

இந்நிலையில் சட்டமன்ற பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் அரியலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் நேற்றைய தினம் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த ஆதி திராவிடர் மாணவர்கள் விடுதிக்கு சென்ற அமைச்சர் வேல்முருகன், அங்கு சமைத்த உணவுகளை சாப்பிட்டு அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் சாப்பிட்ட உப்புமாவின் தரம் குறைவாக இருப்பதை அட்ரிந்த அவர் சமையல் அறையில் உள்ள பொருட்களின் தரம் குறித்து பரிசோதித்தார். அதில் கடந்த 15ஆம் தேதியுடன் காலாவதியான ரவா பாக்கெட்களை இன்னும் சமையல் அறையின் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதுமட்டுமல்ல அதே ரவாவில் மாணவர்களுக்கு உப்புமா செய்து கொடுத்ததையும் கண்டறிந்தார். பிள்ளைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டால் யார் பொறுப்பு என அதிகாரிகளை விளாசிய வேல்முருகன், அங்கிருந்த ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரியை அழைத்து காலாவதியான ரவா பாக்கெட்களை காட்டி என்ன இது என வினவினார். அதற்கு அந்த அதிகாரி பதில் சொல்ல முடியாமல் திணறிய நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். ஒரு வேளை வேல்முருகன் ஆய்வுக்கு செல்லாமல் இருந்திருந்தால், காலாவதியான ரவா பாக்கெட்களில் தான் ஆதி திராவிடர் விடுதி மாணவர்களுக்கு உப்புமா செய்து கொடுத்திருப்பார்கள். சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வின் மூலம், நல்வாய்ப்பாக மாணவர்கள் உடல்நலம் காக்கப்பட்டது.

Tags

Next Story