அழுத்தம் கொடுத்தால் இணங்கும் அளவுக்கு நான் பலவீனமாக இல்லை: திருமாவளவன்
Thirumavalavan
அழுத்தம் கொடுத்தால் இணங்கும் அளவுக்கு நான் பலவீனமாக இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கூட்டணி அழுத்தம் காரணமாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனால் கலந்துகொள்ள முடியவில்லை என த.வெ.க. தலைவர் விஜய் பேசியதற்கு மறுப்பு தெரிவித்தார். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்கக்கூடிய அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. திமுகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அவரது விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மன்னராட்சி எப்போதே ஒழிக்கப்பட்டுள்ளது. மேடை பேச்சுகளில் இது போன்ற கருத்துகள், விமர்சனங்கள் வருவது இயல்புதான். இதை பொருட்படுத்த தேவையில்லை. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயங்குகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. அவரிடம் விளக்கம் கேட்போம். உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம். அதன்பிறகு கட்சி முன்னணி தோழர்களுடன் கலந்து பேசி முடி எடுப்போம் என தெரிவித்தார்.