புயல் பாதிப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்: வானதி சீனிவாசன்
vanathi srinivasan
புயல் பாதிப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் இருவேலம்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைச்சர் பொன்முடி காருக்குள் அமர்ந்தபடி பேசி உள்ளார். கோபம் அடைந்த மக்கள் காரை விட்டு இறங்கி வர மாட்டீர்களா என கூறி அவர் மீது சேற்றை வீசி உள்ளனர். நிர்வாக திறனற்ற, மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க. அரசால் பெருமழை பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் சில இடங்களுக்குச் சென்று புகைப்படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனரே தவிர, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் தி.மு.க. அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கடந்த மூன்றரை ஆண்டுகால தி.மு.க. அரசுக்கு மக்கள் வழங்கிய சான்றிதழ் தான் இந்த சம்பவம். இனியாவது அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் மக்களை மதிக்க வேண்டும். உணவு, குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டு பேசுவதை தி.மு.க. அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் இந்த கோபம், 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.