தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
செல்வப் பெருந்தகை
தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புயல் மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிவாரண நிதியாக ரூபாய் 2000 கோடியை ஒதுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த காலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் நிதி கேட்ட போது தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள். அதேபோல, இம்முறையும் பிரதமர் மோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட தொகையை ஒதுக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது. இத்தகைய இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள வேண்டும். எனவே, தமிழக முதலமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.