ஏ.கே.பி.சின்ராஜ் மீண்டும் நாமக்கல் தொகுதியில் போட்டியா?
ஏ.கே.பி.சின்ராஜ்
திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவை (பொது)தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள ஏ.கே.பி.சின்ராஜ் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
ராசிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நாமக்கல் (பொது) மக்களவை தொகுதியாக சீரமைப்பு செய்யப்பட்டு மாற்றம் பெற்றது. நாமக்கல் மக்களவை தொகுதியின் கீழ் நாமக்கல், ராசிபுரம் (எஸ்சி), சேந்தமங்கலம் (எஸ்டி), பரமத்திவேலூர், திருச்செங்கோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த சங்ககிரி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் சுமார் 14.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் நாமக்கல் (பொது) தொகுதி திமுக கூட்டணியில் இடம் பெற்ற கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் சார்பில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த கொ.ம.தே.க. நிர்வாகி ஏ.கே.பி.சின்ராஜ் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் அதிமுக வேட்பாளர் பி.காளியப்பனை விட 265151 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டுகள் இவர் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக அரசின் திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலைப் பணிகள்,பல்வேறு துறைகளின் கீழ் தட்டப்படும் கட்டுமானப் பணிகள் போன்றவற்றை திடீர் ஆய்வு மேற்கொண்டு முறையாக நடைபெறுகிறதா என உறுதி செய்து வந்ததால்,
பல இடங்களில் ஒப்பந்ததாரர்கள் தரமான சாலைகள், கட்டுமானப்பணிகளை மேற்கொண்டனர். மேலும் ஆற்று மணல் கடத்தல், முறைகேடான மதுபான விற்பனை போன்றவற்றை தடுத்து நிறுத்தினார். இதனால் பல இடங்களில் கள்ளத்தனமாக நடைபெற்ற கடத்தல்கள் தடுக்கப்பட்டதுடன், அரசு திட்டப்பணிகள் தரமாக நடைபெற்றன. மேலும் கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்,
பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதுடன், பலருக்கு கல்வி ஊக்கத்தொகை, மருத்துவ உதவிகளுக்கு பிரதமரின் நிதியினை பலருக்கு பெற்று தந்துள்ளார். பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள், ரயில்வே திட்டங்கள் பெற்றுதந்துள்ளார். தன் மீது எந்தவித முறைகேடுக்கும் இடமின்றி ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். நேர்மையானவர்களுக்கு இனி அரசியலில் இடமில்லை என பேசிய வந்த இவர், இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறிவந்தார்.
இந்நிலையில் நாமக்கல் தொகுதி மீண்டும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுளள நிலையில், போட்டியிடுவது யார் என கேள்வி பொதுமக்கள் எழுந்துள்ளது. அக்கட்சியின் நிர்வாகிகள் சூர்யமூர்த்தி, மாதேஸ்வரன் ஆகியோர் பெயர்கள் சொல்லப்படும் நிலையில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் ஏ.கே.பி.சின்ராஜ் மீண்டும் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தி வருவதாக தெரிகிறது.
இதனால் ஏ.கே.பி.சின்ராஜ் மீண்டும் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அவரை பொதுமக்கள், ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ஏ.கே.பி.சின்ராஜ் மீண்டும் போட்டியிடுவாரா என எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.