கவர்னரின் தேநீர் விருந்து; முதலமைச்சர் பங்கேற்கமாட்டார் என தகவல்!!

CM Stalin
குடியரசு தினத்தையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில், கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்காமல் தவிர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை அல்லது அரிட்டாப்பட்டியில் நாளை பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அரிட்டாபட்டி மக்களை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு செல்கிறார். சென்னையில் நாளை குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழா முடிந்த பிறகு அரிட்டாபட்டி புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.