மடைமாற்றாமல் பதில் சொல்லுங்கள் ஸ்டாலின் SIR ; யார் அந்த SIR?: ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்டாலின் "SIR"-ன் ஆட்சியைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி கேட்ட "யார்_அந்த_SIR" என்ற ஒற்றைக் கேள்வி. அதற்கு பதில் சொல்லத் திராணி இல்லாமல், சட்டமன்றத்தில் தன் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொட்டியுள்ளார். பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொன்னால் களங்கம் ஏற்படும் என்று சொல்லும் ஸ்டாலின் SIR, தான் நடத்தும் விடியா ஆட்சியே பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் களங்கம் தான் என்பதை முதலில் உணர வேண்டும். "ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று இத்தனை நாட்கள் திமுக அமைச்சர்கள் சொன்னதற்கும், "ஞானசேகரன் திமுக அனுதாபி தான்" என்று இன்று ஸ்டாலின் சார் சட்டமன்றத்தில் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்திற்கும் உள்ள வேறுபாடும், "ஞானசேகரன் மீது திமுக ஆட்சியில் எந்த வழக்கும் இல்லை; அதிமுக ஆட்சியில் தான் வழக்கு பதியபட்டது" என்று திமுக அனுதாபி ஞானசேகரன் பற்றி அமைச்சர் ரகுபதி சார் அளித்த வாக்குமூலமுமே, இந்த வழக்கில் அதிமுக மீண்டும் மீண்டும் எழுப்பும் கேள்வியை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது. "இந்த வழக்கில் ஒரே ஒரு குற்றவாளி தான்" என்று ஸ்டாலின் சாரின் அரசு இந்த வழக்கை மூட முயற்சித்ததால் தான் #யார்_அந்த_SIR என்ற கேள்வியே மக்களிடையில் எழுந்தது. அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இவ்வளவு நாள் பேசாமல், சட்டமன்றத்தின் மாண்பு மீதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீதும் துளியும் மரியாதை இல்லாமல் இன்றைக்கு ஸ்டாலின் SIR பேசியிருக்கும் பேச்சு வெட்கக்கேடானது. பொள்ளாச்சி வழக்கை CBI விசாரணைக்கு நேர்மையுடன் மாற்றி உத்தரவிட்டது அதிமுக அரசு. ஆனால், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது ஸ்டாலின் சாரின் அரசு. அதிமுகவிற்கு ஒருபோதும் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை! "போராட்டங்களையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கி, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் ஆட்சி தான் ஸ்டாலின் சாரின் ஆட்சி." "ஸ்டாலின் சாரின் வெட்கங்கெட்ட ஆட்சிக்கு வேங்கைவயலே சாட்சி" "திமுக அலங்கோல ஆட்சிக்கு அண்ணா பல்கலை. பாலியல் வழக்கே சாட்சி" என்று ஸ்டாலின் SIR பேசிய அதே மொழியில் பதில் அளிக்கத் தெரிந்தாலும், ஸ்டாலின் SIR சொன்னது போல் இது ஒரு Sensitive வழக்கு என்பதை உணர்ந்து தான், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் குரலாகவே எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவினர் கேள்வியைக் கேட்டு வருகிறோம் என்பதை மக்கள் அறிவார்கள். மடைமாற்றாமல் பதில் சொல்லுங்கள் ஸ்டாலின் SIR- #யார்_அந்த_SIR ? என்று அவர் பதிவிட்டுள்ளார்.